×

பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை எல்ஐசி பங்குகளை விற்பது ஆபத்தானது: அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

சென்னை: மத்திய அரசின் பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்று அரசியல் கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர். கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்): மக்களுக்கான  பிரச்னைகளுக்கு பட்ஜெட்டில் எதிர்பார்த்த தீர்வு கிடைக்காததால்  மிகுந்த ஏமாற்றம் தான் ஏற்பட்டிருக்கிறது. கடன் சுமையால் பாதிக்கப்படுகிற விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடிக்கான அறிவிப்பு இல்லை. பிரதமர் நேரு உருவாக்கிய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பதை வன்மையாக கண்டிக்கிறேன். ராமதாஸ்(பாமக நிறுவனர்): வேளாண் வருமானத்தை பெருக்க 16 அம்ச திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதும், நிபந்தனைகளுடன் வருமானவரிக் குறைப்பு அறிவிக்கப்பட்டிருப்பதும் மகிழ்ச்சியளிக்கின்றன. வளர்ச்சியை  விரைவுபடுத்தும் நோக்கம் கொண்ட இந்த பட்ஜெட் வரவேற்கத்தக்கதாகும். நேரடி வரிகளைப் பொறுத்தவரை வருமானவரி விலக்கு உச்சவரம்பை ரூ. லட்சமாக  உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை இந்த ஆண்டும் நிராகரிக்கப்பட்டிருப்பது  ஏமாற்றம் அளிக்கிறது. எல்.ஐ.சி.யின் மத்திய அரசுக்கு உள்ள பங்குகளை பங்கு சந்தைகள் மூலம் தனியாருக்கு விற்கும் முடிவு மிகவும் ஆபத்தானது ஆகும். பொதுத்துறை நிறுவனங்களை படிப்படியாக தனியாருக்கு  விற்பனை  செய்வது மத்திய அரசின் வரி இல்லாத வருவாயை குறைத்து விடும். இது நல்ல  விஷயமல்ல.

வைகோ(மதிமுக பொது செயலாளர்): விவசாயிகள் தற்கொலைக்குக் காரணமான கடன் சுமைக்கு நிரந்தரத் தீர்வோ, வேளாண் கடன்கள் தள்ளுபடி அறிவிப்போ இல்லாதது ஏமாற்றம் தருகிறது. இந்தியாவில் லாபம் ஈட்டக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்கப்பட்டு 2.1 லட்சம் கோடி திரட்டப்படும் என்ற அறிவிப்பு பொதுத்துறை நிறுவனங்களைச் சீரழித்து விடும். ஆதிச்சநல்லூரில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்பதைத் தவிர மத்திய வரவு செலவுத் திட்டத்தில் வரவேற்கத்தக்கக் கூறுகள் எதுவும் இல்லை. ஜி.கே.வாசன்(தமாகா தலைவர்): பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதோடு, பொருளாதாரத்தையும் உயர்த்தும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. எனவே மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் உள்ளவற்றை விரைவாக செயல்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்த வேண்டும்.

கே.பாலகிருஷ்ணன்(சிபிஎம் மாநில செயலாளர்): புதிய கல்வி கொள்கை அமலாக்கப்படும்; கல்வித்துறையில் வெளிநாட்டு நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் ஈடுபடுத்தப்படும்; தனியார் ஒத்துழைப்போடு புதிய ரயில்கள் இயக்கப்படும்  போன்ற அறிவிப்புகள் அனைத்தும் தனியார்மயமாக்கும் அறிவிப்பாகவே உள்ளது.  பட்ெஜட் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக, கார்ப்பரேட்  முதலாளிகளுக்கு பரிசளிப்பாக அமைந்துள்ளது. இத்தகையப் போக்கு இந்திய  நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீவிரப்படுத்தவும், நாட்டு மக்களின்  வாழ்வாதாரத்தைப் பறிக்கவுமே உதவி செய்யும்.

டி.டி.வி.தினகரன்(அமமுக பொது செயலாளர்): ரயில்வே தனியார் மயமாக்குவதை விரைவுப்படுத்துதல், அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தாமல் தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்தல் போன்றவை ஏழை-எளிய மக்களுக்கு கவலையை அதிகப்படுத்தியிருக்கின்றன. வேலை வாய்ப்பைப் பெருக்குவதற்கான குறிப்பிடத்தக்க செயல் திட்டங்களோ, அதல பாதாளத்தில் கிடக்கும் இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான அறிவிப்புகளோ இல்லாமல் பளபளக்கும் வார்த்தைகள் நிரம்பிய பிரசார உரையைப் போல மத்திய அரசின் பட்ஜெட் அமைந்துவிட்டது. ஏமாற்றமளிக்கிறது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட் மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது. நீண்ட உரை ஆனால் சரியான தீர்வுகள் இல்லை.

Tags : budget party leaders ,leaders ,LIC ,party , Budget people, LIC stock, selling, dangerous, political party, leaders, opinion
× RELATED சென்னையில் தலைமைச் செயலாளர் சண்முகம்...