×

பெரும்பாலான அரசு பஸ்களில் தீயணைப்புக்கருவி, முதலுதவிப்பெட்டி இல்லை: உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சென்னை: பெரும்பாலான அரசு பஸ்களில் தீயணைப்புக்கருவி, முதலுதவிப்பெட்டி இல்லாதநிலை காணப்படுகிறது. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு தினசரி 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் பல்வேறு வழிதடங்களில் இயக்கப்படுகின்றன. இதேபோல் அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகத்தின் மூலமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. இவை தமிழகம் மட்டும் இல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு செல்கின்றன. இதனை நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அரசு பஸ்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி விடுகிறது. இதனால் கடந்த 2011-19ம் ஆண்டு வரை நடந்த விபத்துக்களில் சிக்கி சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படியிருக்கும் சூழ்நிலையில் பெரும்பாலான பஸ்களில் ஆபத்துகாலத்தில் உதவிசெய்யும் தீயணைப்புக்கருவியும், முதலுதவிப்பெட்டியும் இல்லை. பழைய பஸ்களில் டிரைவருக்கு பின்பும், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட பஸ்களில் நடத்துனர் இருக்கைக்கு அருகிலும் இந்தகைய கருவிகளை பொருத்துவதற்காக  பிரத்யேக ஸ்டாண்ட் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒருசில பஸ்களில் தீயணைப்புகருவிகள் இல்லை.

ஒரு சில பஸ்களில் ஸ்டாண்டுகள் கூட இல்லாமல் காணப்படுகிறது. குறிப்பாக சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் நிலையில், இங்கு இயக்கப்படும் பஸ்களிலும் ஒருசிலவற்றில் தீயணைப்புக்கருவி இல்லாத நிலையை பார்க்க முடிகிறது. இதேபோல் ஆபத்து காலத்தில் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சையளிக்கும் வகையில் அனைத்து பஸ்களில் முதலுதவிப்பெட்டி அவசியம் இருக்க வேண்டும். இதில் கையுறைகள், ஒருமுறை பயன்படுத்தும் மாஸ்க், பஞ்சு, பேண்டேஜ், ஆன்டிசெப்டிக் லோஷன், கத்தரிக்கோல், நீர்ச்சத்து ெபாடி பாக்கெட்டுகள், மாத்திரைகள் போன்றவையும் இருக்க வேண்டும்.விபத்து ஏற்படும் போது இந்தபெட்டிகளின் பங்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஆனால் ஒருசில பஸ்களில் இவையும் இல்லை. இதனால் விபத்து ஏற்படும் காலத்தில் மிகப்ெபரிய சிக்கல் ஏற்படக்கூடும். 2011-19ம் ஆண்டுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் இனியும் அலட்சியம் காட்டாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதேபோல் விரைவில் கோடைகாலம் துவங்கவுள்ளது. எனவே பயணம் செய்யும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தீயணைப்புகருவிகளையும், முதலுதவிப்பெட்டிகளை உடனடியாக பொருத்த, நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பயிற்சி வழங்க வேண்டும்
பஸ்களில் பொருத்தப்பட்டிருக்கும் முதலுதவிப்பெட்டி, தீயணைப்புக்கருவிளை ஆபத்துகாலங்களில் எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என பலருக்கு தெரிவதில்லை. எனவே இதுகுறித்து போக்குவரத்துத்துறை குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை அனைவருக்கு பயிற்சி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Tags : Most government, buses , fire extinguisher, first aid kit,demand immediate action
× RELATED சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 87.13% மாணவ, மாணவியர் தேர்ச்சி: 56 பேர் 100/100