×

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் 2வது நாளாக ஸ்டிரைக்

* சேவை அடியோடு முடங்கியது
* பணமில்லாமல் ஏடிஎம்கள் மூடல்
* மக்கள் கடும் பாதிப்பு

சென்னை: 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்களின் ஸ்டிரைக் நேற்று 2வது நாளாக நீடித்தது. இதனால் வங்கி சேவை அடியோடு முடங்கியது.   வங்கி ஊழியர்கள் தங்களுக்கு 20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். சிறப்பு ஊதியத்தை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் ஜனவரி 31ம் தேதி, பிப்ரவரி 1ம் தேதி ஆகிய 2 நாட்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். அதன்படி நேற்று  முன்தினம் முதல் நாடு தழுவிய ஸ்டிரைக் தொடங்கியது. இந்த ஸ்டிரைக்கில் இந்தியா முழுவதும் 80,000 வங்கி கிளைகளை சேர்ந்த 10  லட்சம் ஊழியர்கள் பங்கேற்றனர்.தமிழகத்தில் 16,000 வங்கி கிளைகளை சேர்ந்த 60 ஆயிரம்  ஊழியர்களும் பங்கேற்றனர். அதுமட்டுமல்லாமல் சில தனியார் வங்கி  ஊழியர்களும் ஸ்டிரைக்கில் கலந்து கொண்டனர். முதல் நாளான நேற்று வங்கி ஊழியர்கள் யாரும் வராததால் நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருந்தன.

ஒரு நாள் ஸ்டிரைக்கால் இந்தியா முழுவதும்  ₹23 ஆயிரம் கோடி மதிப்பிலான 31 லட்சம் காசோலை பரிவர்த்தனை  முடங்கியது. சென்னையில் மட்டும் 7 ஆயிரம் கோடி மதிப்பிலான 9 லட்சம்  காசோலை பரிவர்த்தனை முடங்கியது.
இந்த நிலையில் மாதத்தின் முதல் சனிக்கிழமை என்பதால் நேற்று வங்கிகளுக்கு வேலை நாளாகும். ஆனால், ஊழியர்கள் ஸ்டிரைக்கால் நேற்றும் வங்கிகள் திறக்கப்படவில்லை. பொதுமக்கள் சிலர் வங்கிகள் திறந்திருக்கும் என்று வந்திருந்தனர். ஆனால், வங்கிகள் மூடப்பட்டிருந்ததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற காட்சியை காண முடிந்தது.வங்கிகள் மூடப்பட்டிருந்ததால் மக்கள் ஏடிஎம் மையங்களை நோக்கி படையெடுத்தனர். இதனால், சென்னையில் உள்ள பெரும்பாலான ஏடிஎம்கள் நேற்று முன்தினமே காலியானது. குறிப்பாக வங்கிகளுடன் இணைந்த ஏடிஎம்கள் அனைத்திலும் பணம் இல்லாத நிலை தான் காணப்பட்டது. அதாவது, வங்கிகளுடன் இணைந்த ஏடிஎம்களில் வங்கி ஊழியர்கள் தான் பணம் நிரப்புவது வழக்கம். அவர்கள் வராததால் அந்த பணிகளும் தடைப்பட்டது. திறந்திருந்த ஒரு சில ஏடிஎம்களில் மக்கள் நீண்ட வரிசையில் பணத்தை எடுத்து சென்ற காட்சியை காண முடிந்தது.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறையாகும். இதனால், வங்கிகள் செயல்படாது. நாளை திங்கட்கிழமை வங்கிகள் திறந்த பிறகு தான், அதாவது மதியத்துக்கு மேல் தான் நிலைமை சீரடையும் என்று கூறப்படுகிறது. இதே கோரிக்கையை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் மார்ச் 11, 12, 13 ஆகிய மூன்று நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். அதிலும் கோரிக்கைகள் நிறைவேற்றாத பட்சத்தில் ஏப்ரல் 1ம் முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Strike ,bank employees , Strike, 2nd day, bank employees insisting,12 feature requests
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து