×

அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு 15 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு

* ஒருவர் விடுவிப்பு
* நாளை தண்டனை விவரம்
* போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சென்னை: அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் 15 பேரை குற்றவாளிகள் என்று சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் என்று நீதிபதி மஞ்சுளா தெரிவித்துள்ளார். சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 11 வயது சிறுமியை அதே குடியிருப்பில் வேலை செய்து வந்த வாட்டர்மேன், லிப்ட் ஆப்ரேட்டர், வாட்ச்மேன் உள்ளிட்டோர் பல மாதங்களாக பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது.இதையடுத்து, அயனாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த 2018ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி ரவிக்குமார் (56), சுரேஷ் (32), ராஜசேகர் (48) எரால்பிராஸ் (58), அபிஷேக் (28), சுகுமாரன் (60), ஜெய்கணேஷ்(23), பாபு(36), பழனி(40), தீனதயாளன்(50), ராஜா(32), சூர்யா(23), குணசேகரன்(55), ஜெயராமன்(26), உமாபதி(42) ஆகிய 17 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனைதொடர்ந்து, 17 பேரும் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது நீதிமன்றத்தில் இருந்த வக்கீல்கள், 17 பேரையும் சரமாரியாக தாக்கினர். பின்னர் போலீசார் குவிக்கப்பட்டு, அனைவரும் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் வக்கீல்கள் யாரும் இவர்களுக்காக ஆஜராக மாட்டோம் என்று தெரிவித்தனர்..

இதனையடுத்து, அனைவர் மீதும் 2018 செப். 6ம் தேதி குண்டர் சட்டம் பாய்ந்தது. தொடர்ந்து, போலீசார் 17 பேர் மீதும் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி 300 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து 2018 டிசம்பர் 21ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 354 பி, 366 ( பாலியல் வன்கொடுமை) 376  ஏ, பி ( காயம் ஏற்படுத்துதல்), 376 பிடி ( கூட்டு பாலியல் வன்கொடுமை), 307 (கொலை முயற்சி), 506 (2) கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழும், பாலியல் குற்றங்களில் இருந்து சிறாரை பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் 10 மற்றும் 12 வது பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.இதுதவிர, 12 வயதுக்கு குறைவான சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் 2018ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குற்றவியல் திருத்தச் சட்டத்தின் புதிதாக நிறைவேற்றப்பட்ட பிரிவுகளின் கீழும் குற்றம் சாட்டப்பட்டது.குற்றச்சாட்டு பதிவின் போது அனைவரும் தாங்கள் குற்றமற்றவர்கள் என்றும், தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் மறுப்பு தெரிவித்தனர். பின்னர் அரசு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தவும் ஒப்புக்கொண்டனர். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, அரசு
தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதற்கிடையில் இவர்கள் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ஜனவரி 11ம் தேதி ரத்து செய்தது.

அதனைதொடர்ந்து அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞராக ரமேஷ், குற்றம் சாட்டப்பட்டவர்களின் சார்பில் ஆஜரான வக்கீல்கள் என அனைவரும் சாட்சிகளிடம் விசாரணையை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கினர். அதில், அரசு தரப்பு சாட்சியாக 36 சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக 120 ஆவணங்களும் சமர்பிக்கப்பட்டது. இதைவைத்து, இந்த வழக்கின் விசாரணை கடந்த 11 மாதங்களாக நடந்து வந்தது. இந்நிலையில், வழக்கில் குற்றச்சாட்டு பதிவு, சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை, இருதரப்பு வாதங்கள் என அனைத்தும் கடந்த டிசம்பர் 6ம் தேதி முடிவடைந்தது. பின்னர், போக்சோ வழக்கின் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா தீர்ப்பை தள்ளிவைத்தார். இந்த வழக்கில், 17 பேரில் ஒருவரான பாபு என்பவர் உடல்நிலை சரியில்லாமல், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்தார். இதனைதொடர்ந்து மற்ற 16 பேருக்கும் ஜாமீன் கிடைக்காததால் சிறையிலேயே இருந்து வந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கில் பிப்.1ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதன் காரணமாக சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தை சுற்றி 100க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டனர்.இதனைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டனர். போச்சோ வழக்கு என்பதால் குற்றவாளிகள் மற்றும் இருதரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்ற அறைக்குள் சென்ற பின்னர் கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டது. பூட்டிய அறைக்குள் நீதிபதி மஞ்சுளா தீர்ப்பை அறிவித்தார்.இதன்படி குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் 15வது குற்றவாளியான குணசேகரன் தவிர்த்து மீதம் உள்ள 15 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டதால் 15 பேரும் குற்றவாளிகள் என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா அறிவித்தார். மேலும் இவர்களுக்கான தண்டனை விவரம் நாளை (பிப். 3ம் தேதி ) அறிவிக்கப்படும் என்று தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.

சாட்சியம் அளித்த தினகரன் நாளிதழ்
அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கு தொடர்பாக முதன் முதலில் தினகரன் நாளிதழ்தான் செய்தியாக வெளியிட்டது. இதன்பிறகு இந்த வழக்கில் தினகரன் நாளிதழ், அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டது. வழக்கு விசாரணையின் போது தினகரன் நாளிதழ் சார்பில் சாட்சியமும் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்து வந்த பாதை
* 2018 ஜூலை 16ம் தேதி 17 பேர் கைது
* 2018 செப் 6ம் தேதி குண்டர் சட்டம் போடப்பட்டது.
* 2018 செப்டம்பர் 12ம் தேதி 300 பக்க குற்றப்பத்திரிக்கையை விசாரணை அதிகாரி தாக்கல் செய்தார்.
* 2018 டிசம்பர் 21ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
* 2019 ஜனவரி 11ம் தேதி குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது.
* 2019 ஜனவரி 18ம் தேதி அரசு தரப்பு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை தொடங்கியது.
* டிசம்பர் 6ம் தேதி வழக்கு விசாரணை அனைத்தும் முடிந்து தீர்ப்புக்கு ஒத்திவைக்கப்பட்டது.
* டிசம்பர் 5ம் தேதி ஏற்கனவே இயங்கி வந்த மகளிர் நீதிமன்றம் போக்சோ நீதிமன்றமாக மாற்றப்பட்டது.
* வழக்கு விசாரணையின் போது உடல்நல குறைவு காரணமாக பாபு என்பவர் உயிரிழந்தார்.Tags : Ayanavaram , Ayanavaram,woman, rape case,15 convicted
× RELATED அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கில் தண்டனை கைதி தற்கொலை