×

பட்ஜெட்டால் பெரும் ஏமாற்றம் பங்குச்சந்தையில் ரூ.3.46 லட்சம் கோடி போச்சு

பொருளாதார மந்தநிலை நிலவி வரும் நிலையில், மத்திய பட்ஜெட்டுக்காக தொழில் நிறுவனங்கள் பெரிதும் ஆவலுடன் காத்திருந்தன. இதில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தொழிற்துறைக்கு பல்வேறு சலுகை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இதே போல், முதலீட்டாளர்களும் பொறுமையுடன் காத்திருந்தனர். இதனால், இந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தையில் ரூ.2.5 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று பட்ஜெட் அறிவிப்புகள் வெளியானதுமே, தொழிற்துறைக்கென பெரிய அளவில் எந்த அறிவிப்பும் இல்லாமல் இருந்ததால், ஆரம்பத்தில் இருந்தே சரிவுடனே பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியது. நேரம் செல்ல செல்ல நிலைமை மேலும் மோசமாகி, இறுதியில் மும்பை பங்கு சந்தை 1000 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தையான நிப்டி 300 புள்ளிகளும் சரிந்தன.

நேற்று காலை வர்த்தகம் தொடங்கிய போது மும்பை பங்குச்சந்தை 40,753.18 ஆக தொடங்கி மாலையில், 987.96 புள்ளிகள் சரிந்து 39,753.53 புள்ளிகளாக முடிந்தது. நிப்டி 300.25 புள்ளிகள் சரிந்து 11,661.85 ஆக முடிந்தது. கடந்த ஆண்டு ஜூலையிலும் பட்ஜெட் நாளில் பங்குச்சந்தை கடுமையான சரிவை சந்தித்து பலத்த அடி வாங்கியது குறிப்பிடத்தக்கது. மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளின் மதிப்பு நேற்று முன்தினம் வர்த்தக முடிவில் ரூ.1,56,50,981.73 கோடியாக இருந்தது. இது நேற்று ரூ.3,46,256.76 கோடி சரிந்து ரூ.1,53,04,724.97 கோடியாக ஆனது. இதனால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

* பாரத்நெட், தகவல் பூங்காக்கள் திட்டத்துக்கு ரூ.6,000 கோடி
மத்திய பட்ஜெட்டில் இணைய சேவை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாரத்நெட், தகவல் பூங்காக்கள் திட்டத்துக்கு ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இந்தாண்டு இறுதிக்குள் ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துக்கள் இணைய வசதி மூலம் தகவல் பரிமாற்றத்துக்கான பிரத்யேக திட்டத்தில் இணைக்கப்பட உள்ளன. இதன் மூலம், நாடு முழுவதும் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட காவல் நிலையங்கள், தபால் நிலையங்கள், ரயில் நிலையங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பொதுத்துறை அமைப்புகள் இதில் இணைக்கப்படும். தகவல் பூங்காக்கள் அமைப்பதற்கான கொள்கைகள் விரைவில் அறிவிக்கப்படும். குவாண்டம் தொழில்நுட்பம்: குவாண்டம் கம்ப்யூட்டிங் மூலம் தொழில்நுட்பத்துறையில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். குவாண்டம் தொழில்நுட்பத்துக்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.8,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* தகவல் ஆணையத்துக்கு இரட்டிப்பு நிதி ஒதுக்கீடு
மத்திய தகவல் ஆணையம் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு 2020-2021ம் ஆண்டு நிதியாண்டுக்கு ரூ.9.90 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட் ஒதுக்கீடு உடன் ஒப்பிடுகையில் இது 80% அதிகமாகும். கடந்த 2019-2020ம் நிதியாண்டில் மத்திய தகவல் ஆணையம் மற்றும் தகல் அறியும் உரிமை சட்டம் ஆகியவற்றுக்கு ரூ.5. 5கோடியை மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியிருந்தது.

* சிபிஐ.க்கு ரூ.802.19 கோடி
சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்பானது ஊழல், வங்கி மோசடிகள் மற்றும் உள்நாட்டில் நிகழும் மிகப் பெரிய குற்ற வழக்குகளை விசாரணை செய்து வருகின்றது. இந்த அமைப்புக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.802.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக ரூ.4 கோடி மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. 2019-2020ம் நிதியாண்டில் சிபிஐ.க்கு முதலில் ரூ.781.10 கோடி ஒதுக்கப்பட்டு பின்னர் ரூ.798 கோடி ஒதுக்கப்பட்டது. கடந்த பட்ஜெட்டோடு ஒப்பிடுகையில் 0.50 சதவீதம் அதிகமாகும்.


* பங்கு ஆதாய வரி நீக்கம்
நிறுவனங்கள் மீதான பங்கு ஆதாய விநியோக வரியை ரத்து செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை நிறுவனங்களானது பங்குதாரர்களுக்கு 15 சதவீதம் என்ற அடிப்படையில் ஆதாய (டிவிடெண்ட்்) விநியோக வரியை செலுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இத்திட்டமானது இந்தியாவை முதலீட்டிற்கான கவர்ச்சிகரமான இடமாக மாற்றும். இதன் காரணமாக ஆண்டுக்கு ரூ.25,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

* விளைபொருட்கள் சப்ளைக்கு தனி ரயில்கள், விமானங்கள்
பால், காய்கறி போன்ற விரைவில் கெட்டுப்போகும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல ரயில்வே அமைச்சகத்துடன் இணைந்து குளிர்சாதன வசதியுடன் கூடிய கிஷான் ரயில் இயக்கப்படும் என பட்ஜெட்டில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதன் மூலம், விவசாயிகளின் வருவாய் அதிகரிப்பதுடன். விவசாயப் பொருட்கள் வீணாவது தடுக்கப்படும். இது மட்டுமின்றி, விவசாய விளைப்பொருட்களை கொண்டுள்ள ‘கிருஷி உதான்’ என்ற திட்டம் விமான போக்குவரத்து துறையுடன் இணைந்து செயல்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இத்திட்டத்தின் கீழ், உள்நாட்டிலும், வெளிநாடுகளுக்கும் விவசாயப் பொருட்கள் சப்ளைக்கான தனி விமான மார்க்கம் வகுக்கப்படும்.

* ஆதிச்சநல்லூர் உட்பட 5 இடங்களில் தொல்பொருள் அருங்காட்சியகம்
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்ச நல்நூர் உட்பட 5 இடங்களில் தொல்பொருள் ஆராய்ச்சி மேம்பாட்டு மையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. மேலும், 4 அருங்காட்சியங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. ராஞ்சியில் பழங்குடியினர் அருங்காட்சியகம் தொடங்கப்படுகிறது. 3,000 ஆண்டுக்கு முந்தயவை: ஆதிச்ச நல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களின் கார்பன் பரிசோதனை முடிவுகள் மூலம் அவை 3,000 ஆண்டுகளுக்கு முந்தையவை என தெரிய வந்துள்ளது. இந்த இடம் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது. தென்னிந்தியாவில் மிகப்பெரிய நாகரீகம் இருந்தது என்பதற்கான சான்றுகளாக இந்த ஆய்வுகள் உள்ளன.

* பெண்கள், குழந்தைகள் மேம்பாடு புதிய திட்டங்கள் எதுவும் இல்லை: நிதி ஒதுக்கீடு மட்டும் அதிகரிப்பு
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துக்கு இந்த நிதியாண்டில் ரூ.30 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டைவிட 14 சதவீதம் அதிகம். ஊட்டச்சத்து, சமூக பாதுகாப்பு மற்றும் இதர நலத்திட்ட பணிகளுக்கு கடந்த நிதியாண்டில் ரூ.3,891.71 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், இதற்கு இந்த நிதியாண்டில் ரூ.4,036.49 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* தேசிய ஊட்டச்சத்து திட்டத்துக்கான நிதி ரூ.3,400 கோடியிலிருந்து ரூ.3,700 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
* மருத்துவ வசதி, போலீஸ் உதவி, சட்ட உதவி, பாதிக்கப்பட்ட பெண்களுக்கான கவுன்சிலிங் ஆகிய சேவைகளை ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் வழங்கும் திட்டத்துக்கான நிதி ரூ.204 கோடியிலிருந்து ரூ.385 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
* கர்ப்ப கால உதவிகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சேவைகளுக்கான பிரதமரின் மத்ரு வந்தனா திட்டத்துக்கான நிதி ரூ.2,300 கோடியிலிருந்து ரூ.2,500 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதல் குழந்தை பெறும் தாய்மார்களுக்கு ரூ.6 ஆயிரம் நிதியதவி அளிக்கப்படும்.
* குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள் திட்டத்துக்கான நிதி ரூ.1,350 கோடியிலிருந்து ரூ.1,500 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
* பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் திட்டத்துக்கு இந்த நிதியாண்டில் ரூ.220 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* பெண் சக்தி மையங்களுக்கான நிதி ரூ.50 கோடியிலிருந்து ரூ.100 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
* வேலை செய்யும் பெண்களுக்கான விடுதி திட்டத்துக்கான நிதி ரூ.45 கோடியிலிருந்து ரூ.150 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
* வேலைக்கு செல்லும் பெண்களின் குழந்தைகளை பராமரிக்கும் மையங்களுக்கான நிதி ரூ.50 கோடியிலிருந்து ரூ.75 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
* பெண்கள் பாதுகாப்பு, கடத்தல் தடுப்பு, மீட்பு மற்றும் மறுவாழ்வு திட்டங்களுக்கான நிதி ரூ.20 கோடியிலிருந்து ரூ.30 கோடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
* பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுக்கு இந்தாண்டு புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. பழைய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மட்டுமே அதிகரிக்கப்பட்டு உள்ளது.

Tags : Budget, big disappointment, stock market, Rs 3.46 lakh crore, Bochu
× RELATED பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில்...