×

எல்லா வரி சலுகையையும் விட்டுக்கொடுத்தால் மட்டுமே வரி குறைப்பு வருமான வரி விகிதத்தில் மாற்றம்: நீண்ட பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

*  எல்ஐசி, வங்கி பங்கு தனியாருக்கு விற்பனை
*  150 ரயில்கள் தனியார் மயமாகிறது
*  அரசு மருத்துவமனையில் தனியார் பங்கு
*  பண்ணை விவசாயத்தில் தனியார் அனுமதி
*  விவசாயத்துக்கு ரூ.2.83 லட்சம் கோடி
*  ஆதிச்சநல்லூரில் தொல்லியல் அருங்காட்சியகம்
*  விரைவில் புதிய கல்விக்கொள்கை
*  கிராம பெண்களுக்கு தான்யலட்சுமி திட்டம்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் 2020-2021ம் ஆண்டுக்கான மிக  நீண்ட மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இதில், தனிநபர் வருமான விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விதமான வரிச்சலுகைகளையும் விட்டுக் கொடுத்தால் மட்டுமே வரிகள் குறைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், அரசு மருத்துவமனை, பண்ணை விவசாயத்தில் தனியார் முதலீட்டை அனுமதிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. எல்ஐசி. ஐடிபிஐ.யின் பங்குகள் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயத்துக்கு ரூ.2.83 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 150 ரயில்கள் தனியார் மயமாக்கப்படுகிறது. கிராம பெண்களுக்கு தான்ய லட்சுமி திட்டம், ஆதிச்சநல்லூரில் தொல்பொருள் அருங்காட்சியகம் அமைக்கும் திட்டம், புதிய கல்விக் கொள்கை திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2வது முறையாக ஆட்சிக்கு வந்த பின்னர், 2வது முறையாக, 2020-21ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்தார். முன்னதாக பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.  பின்னர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து, பட்ஜெட் குறித்த விளக்கங்களை அளித்தார். அதைத்தொடர்ந்து, பட்ஜெட் உரையுடன் நாடாளுமன்றத்துக்கு அவர் வந்தார். சரியாக காலை 11 மணிக்கு தனது பட்ஜெட் உரையை தொடங்கினார்.

அதில் அவர் கூறியதாவது:
கடந்த நிதியாண்டில் புதிதாக 16 லட்சம் பேர் வரி அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில், மக்களுக்கான மானியங்கள் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்டதால், ஒவ்வொரு இந்திய குடும்பங்களுக்கும், தங்கள் செலவினத்தில் 4 சதவீதம் வரை மிச்சமாகிறது. இந்த வரியால் சிறு, குறு தொழில்கள் பயனடைந்துள்ளன. நாடு முழுவதுமான பொருளாதாரம், ஜிஎஸ்டி.யால் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளின் வருமானத்தை 2022ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குவதே மத்திய அரசின் இலக்கு. அதை நிறைவேற்றும் வகையில் விவசாய துறைக்கு ரூ.2.83 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. 20 லட்சம் விவசாயிகளுக்கு சூரிய சக்தி மூலம் இயங்கும் மின் மோட்டார்கள் அளிக்கப்படும். காலியாக உள்ள நிலங்களில் சோலார் பேனல்கள் அமைக்க உதவி செய்யப்படும்.

விளைப்பொருட்களை சேமித்து வைக்க கிராமங்களில் தானியக் கிடங்குகள் அமைக்கப்படும். மழை குறைவாக உள்ள இடங்களில் ஒருங்கிணைந்த விவசாயத் திட்டம் செயல்படுத்தப்படும். பண்ணை விவசாயத்தில் தனியார்கள் ஊக்குவிக்கப்படுவார்கள். விவசாயப் விளைப் பொருட்களை ரயில்களில் கொண்டுச் செல்ல, ‘கிஷான் ரயில்’ என்ற தனி ரயில் வசதி ஏற்படுத்தப்படும். ரூ.15 லட்சம் கோடி விவசாயக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், உள்நாட்டுக்குள்ளும் வெளிநாடுகளுக்கும் விளைப் பொருட்களை எடுத்துச் செல்ல தனி விமானங்கள் இயக்கப்படும். தனிநபர் வருமான விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், அனைத்து விதமான வரிச்சலுகைகளையும் விட்டுக் கொடுத்தால் மட்டுமே வரிகள் குறைக்கப்படும். ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் வரையில் வரி கிடையாது. ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 5 சதவீத வரி விதிக்கப்படும். ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வருவாய்க்கு 10 சதவீத வரி விதிக்கப்படும்.

பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி.யிலும், ஐடிபிஐ வங்கியிலும் அரசுக்கு உள்ள பங்குகளில் ஒரு பகுதி விற்பனை செய்யப்படும். இதன் மூலம், அரசுக்கு கூடுதல் நிதி பெருக்கப்படும். ரயில்வே துறையில் பல்வேறு நவீனமய திட்டங்கள் மேற்கொள்ளப்படும். மேலும், 150 ரயில்கள் தனியார் மயமாக்கப்படும். அரசு மருத்துவமனைகளில் தனியார் பங்களிப்புக்கு அனுமதி அளிக்கப்படும். அதிக கட்டமைப்பு வசதிகள் கொண்ட தனியார் மருத்துவமனையில் மருத்துவ பட்டமேற்படிப்புக்கு அனுமதி வழங்கப்படும். தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்ச நல்லூரில் தொல்பொருள் அருங்காட்சியம் அமைக்கப்படும். இது தவிர மேலும் 4 இடங்களில் தொல்பொருள் ஆராய்ச்சி மேம்பாட்டு மையங்கள் மேம்படுத்தப்படும். ராஞ்சியில் பழங்குடியினர் அருங்காட்சியகம் தொடங்கப்படுகிறது. கல்வித் துறையின் வளர்ச்சிக்காக, ஆன்லைன் தொலைதூர கல்வித் திட்டம் அமல்படுத்தப்படும். மேலும், தேசிய அளவிலான புதிய கல்விக் கொள்கை விரைவில் அறிவிக்கப்படும்.

முன்பு விவசாயிகள் தங்கள் வீடுகளில் விவசாயத்துக்கு தேவையான விதைகளை சேகரித்து பாதுகாப்பாக சேமித்து வைத்திருப்பார்கள். தற்போது வேளாண் பண்ணைகளில் இந்த விதைகள் பெற்று விவசாய நிலங்களில் பயன்படுத்துகின்றனர். எனவே, பழைய முறையை அமல்படுத்தும் வகையில் விவசாயத்திற்கு தேவையான விதைகளை சேமிக்க தானிய லட்சுமி என்ற திட்டம் செயல்படுத்தப்படும். இதில், கிராமப்புற பெண்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். கடந்தாண்டை விட நடப்பாண்டில் மத்திய அரசின் கடன் குறைக்கப்பட்டுள்ளது. ஏப்.1ம் தேதி முதல் வரி சீரமைப்பு செயல்படுத்தப்படும். கடந்த 6 ஆண்டில் நாட்டின் கடன் ஜிடிபி.யில் 52 சதவீதத்தில் இருந்து 48 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது. தண்ணீர் தட்டுப்பாடு உள்ள 100 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

மின்னணுப் பொருட்கள் உற்பத்தி செய்யும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு சலுகை அளிக்கப்படும். தொழில்முனைவோர் நடவடிக்கைகள் இந்தியாவின் முதுகெலும்பாக உள்ளது. நடப்பாண்டில் இருந்து ஏற்றுமதி பொருட்களுக்கு வரி விதிக்கப்படும். ஏற்றுமதி கடனுக்காக நிர்விக் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.100 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும். வரும் 2024ம் ஆண்டுக்குள் அரசு - தனியார் பங்களிப்புடன் நாடு முழுவதும் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும். ரயில்வே துறையில் சூரிய மின்சக்தி பயன்பாடு அதிகரிக்கப்படும். வெளிநாட்டில் வரி செலுத்தாத வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, இந்தியாவில் வரி விதிக்கப்படும். தற்போது வெளிநாடு வாழ் இந்தியர்கள், தாங்கள் ஈட்டும் வருமானத்திற்கு இந்தியாவில் வரி செலுத்த தேவையில்லை என்ற நிலை உள்ளது. இனி, வெளிநாட்டில் வசிப்பவர்கள் அந்த நாட்டில் தாங்களின் வருவாய்க்கு வரி செலுத்தாவிட்டால், அவர்கள் இந்தியாவில் வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Nirmala Sitharaman , All Tax Benefits, Tax Reduction, Income Tax Rate, Change, Long Budget, Finance Minister, Nirmala Sitharaman
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...