×

கோடியக்கரை சரணாலயத்திலிருந்து சொந்த நாடுகளுக்கு திரும்பும் பறவைகள்

வேதாரண்யம்: வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை சரணாலயத்திற்கு வந்திருந்த பறவைகள் கோடைகாலம் துவங்க உள்ளதால் தங்களின் சொந்த நாட்டிற்கு திரும்பியது. நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை வனவிலங்கு சரணலாயம் 25 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பசுமைமாறா காடுகள் அமைந்துள்ளது. இதன் எதிர்புறம் சுமார் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் மானாங்கொண்டான் ஆற்றுக்கும், தெற்கு பகுதியில் இருந்து வளவனாறு வரை சுமார் 20 ஆயிரம் கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள பகுதியில் லட்சக்கணக்கான பறவைகள் ஆண்டுதோறும் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆர்ட்டிக் பிரதேசங்களில் நிலவும் கடும் குளிரைப் போக்கவும், உணவுக்காகவும் அங்குள்ள பறவைகள் சரணாலயத்திற்கு லட்சக்கணக்கில் வருகின்றன.

ஆண்டுதோறும் மழைகாலம் துவங்கும் அக்டோபர் மாதம் முதல் கோடைகாலம் துவங்கும் மார்ச் மாதம் வரை இங்கு தங்கி பின் தங்கள் சொந்த நாடுகளுக்கே திரும்பிச் செல்வது வழக்கம். உலகில் 8,650 வகையான பறவைகள் உள்ளன. இந்தியாவில் 1,200 வகையான பறவைகள் உள்ளன. இதில் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு சைபீரியா, ஈரான், ஈராக் நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கில் வரும் நான்கு அடி உயரமுள்ள அழகுமிகு பூநாரை (பிளமிங்கோ) கோடிக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு தனிச் சிறப்பு சேர்க்கும். மேலும் கொசு உள்ளான், கூழைக்கிடா, லடாக்கில் இருந்து சிவப்பு கால் உள்ளான், ஆஸ்திரேலியாவிலிருந்து வரித்தலை வாத்து, உள்நாட்டு பறவைகளான செங்கால்நாரை, பர்மாவிலிருந்து வரும் சிறவி வகைகள், இலங்கையிலிருந்து வரும் கடல்காகம், ஆர்டிக் பிரதேசத்திலிருந்து வருகை தரும் ஆர்டிக்டேன் (ஆலா) இமாச்சலப் பிரதேசத்திலிருந்து வரும் இன்டியன் பிட்டா (காச்சலாத்தி) உள்ளான் வகைப் பறவைகள் என 247 வகைப் பறவைகளும் ஆண்டுதோறும் வந்து செல்கின்றன.

தற்போது ஆர்டிக் பிரதேசத்திலிருந்து சுமார் பதினெட்டாயிரம் கிலோமீட்டர் தூரம் நிற்காமல் கோடியக்கரைக்கு பறந்து வரும் ஆர்டிக்டேன் என்னும் கடல் ஆலாவும், பத்தாயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் பறக்கும் இமயமலை பகுதியில் இருந்து வரும் வரித்தலை வாத்தும் ஈரான், ஈராக், சைபீரியா, வடஅமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கடல்காகம் மற்றும் உள்நாட்டு பறவையான கொக்கு பல்வேறு பறவைகள் தற்போது அதிக அளவில் கோடியக்கரைக்கு வந்தன. பறவைகளின் முதல் இனம் என்று அழைக்கப்படும் முக்குளிப்பான் என்ற பறவையும் இந்த ஆண்டு சரணாலயத்தில் காணப்படுவது சிறப்பாகும். தங்கள் நாட்டிலிருந்து வந்த பறவைகள் தற்போது சொந்த நாடுகளுக்கு திரும்ப செல்லத் துவங்கியுள்ளன. இதனால் பறவைகளை காணவரும் சுற்றுலா பயணிகள் பறவைகளை காணமுடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர். ஒரு சில பறவைக்கூட்டங்கள் சரணாலயத்தில் வெகுதொலைவில் காணப்படுகின்றன. இந்த பறவைகளை காலை மற்றும் மாலை வேளைகளில் காணலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags : home countries ,Kodiyakarai Sanctuary , Kodiyakkarai Sanctuary, Birds
× RELATED தஞ்சை சிவங்கை பூங்காவில் இருந்து...