×

பழநி தைப்பூச திருவிழாவிற்கு மாற்றுவழியில் ஒருவழிப்பாதை: அடிவாரம் வர்த்தகம் சங்கம் கோரிக்கை

பழநி: பழநி தைப்பூச திருவிழாவிற்கு மாற்றுவழியில் ஒருவழிப்பாதை அமைக்க அடிவாரம் வர்த்தகம் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். பழநி கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இவ்விழா நாளை (பிப்.2) கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் பிப்.7ம் தேதியும், தேரோட்டம் பிப்.8ம் தேதியும் நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர். இந்நிலையில் கூட்டத்தை கட்டுப்படுத்த பிப்.8ம் தேதி அடிவாரத்தில் உள்ள சன்னதி வீதி உள்ளிட்ட சாலைகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்படுவது வழக்கம். மாற்றுவழியை ஒருவழிப்பாதையாக அமைக்க வேண்டுமென வலியுறுத்தி அடிவாரம் வர்த்தகர் சங்க தலைவர் கந்தவிலாஸ் செல்வக்குமார், பொதுச் செயலாளர் தங்கராஜ் உட்பட அடிவாரம் வர்த்தகர் சங்கம் நிர்வாகிகள் பலர் பழநி டிஎஸ்பி விவேகானந்தனிடம் மனு அளித்தனர்.

அம்மனுவில் கூறியிருப்பதாவது, தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தின்போது பக்தர்கள் கூட்டம் அதிகளவு இருக்கும் எனக்கருதி பக்தர்கள் நடந்து செல்லும் சில வழித்தடங்கள் கடந்த சில ஆண்டுகளாக ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு வருகின்றன. பிப்.7ம் தேதி இரவு 10 மணி அளவில் சன்னதி ரோடு, தேவர்சிலை ரோடு வழியாக வடக்கு கிரிவீதியில் பக்தர்களை அமரச்செய்து காலை 4 மணிக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதில் சிக்கும் பக்தர்கள் வெளியே செல்ல முடியாமலும், இயற்கை உபாதைகளை கழிக்க போதிய வசதி இல்லாமலும் அவதிப்படுகின்றனர். மேலும், சன்னதி வீதியில் ஏராளமான மடங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வீடுகள் உள்ளன. சன்னதி ரோட்டில் உள்ள குறுக்கு சந்துகளை அடைத்து விடுவதால் இப்பகுதிகளுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள், வியாபாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகின்றனர். பக்தர்கள் தரிசனத்திற்கு செல்லும் வழியில் குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும்.

தவிர, பக்தர்கள் தரிசனத்திற்கு செல்லும் ஒருவழிப்பாதையை தேவர்சிலையில் இருந்து பூங்கா ரோடு வழியாக சென்று அடிவாரம் வடக்கு கிரிவீதியில் அமைந்துள்ள மலைப்பாதையை அடைந்து மலைக்கோயிலுக்கு செல்லும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் கீழே இறங்கும் பக்தர்கள் அடிவாரம் சன்னதிரோடு, அருள்ஜோதி வீதி, அய்யம்புள்ளி சாலை மற்றும் இட்டேரி ரோட்டில் திரும்புவதற்கு இடைஞ்சல் இல்லாத சூழல் ஏற்படும். எனவே, ஒருவழிப்பாதை அமைக்கும் பணியை இதுபோல் மாற்றி அமைக்க மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Road ,Pazhani Thaipuzha Festival ,Foundation Business Association Pathni Thaipuzha Festival Festival , Palani, Taipusa festival, Transformation
× RELATED பழநி கிரிவலப் பாதையில் சுற்றுச்சுவர்...