×

ஈரோடு அருகே கசிவுநீர் ஓடையில் செத்து மிதந்த மீன்கள்: அதிகாரிகள் ஆய்வு

ஈரோடு: ஈரோடு அருகே வில்லரசம்பட்டி பகுதி ஓடையில் மீன்கள் செத்து மிதந்ததால் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். ஈரோடு அருகே வில்லரசம்பட்டி பகுதியில் கீழ்பவானி வாய்க்கால் கசிவுநீர் ஓடை செல்கிறது. இந்த ஓடை வழியாக செல்லும் நீர் கருவில்பாறைவலசு குளத்திற்கு செல்கிறது. இதன்மூலம், இந்த பகுதியில் 150 ஏக்கர் பாசனம் பெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று இந்த கசிவுநீர் குட்டையில் மீன்கள் செத்து மிதந்தது. இந்த பகுதியில் உள்ள ஒரு வாசிங் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய கழிவுநீரால் மீன்கள் செத்து மிதந்ததாக தகவல் பரவியது. இதுகுறித்து அப் பகுதி மக்கள் கூறுகையில்,`கீழ்பவானி வாய்க்காலில் இருந்து வரும் கசிவுநீர், ஓடையில் வரும் நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகிறோம்.

ஆனால், வாசிங் தொழிற்சாலையில் இருந்து கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் ஓடைநீரில் வெளியேற்றியதால் மீன்கள் செத்து மிதந்தது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். இதைத்தொடர்ந்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் உதயகுமார் உத்தரவின்பேரில் உதவி பொறியாளர் ராஜ்குமார் தலைமையில் பறக்கும்படை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் வாசிங் தொழிற்சாலை கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றியது தெரியவந்தது. மேலும், மீன்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்து போனதா அல்லது கழிவுநீரால் இறந்து போனதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றிய ஆலை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : water stream ,Erode , Erode, leaking water, fish
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...