டீயில் மயக்க மருந்து கொடுத்து ஆம்னி பேருந்தில் சென்றவரிடம் 4 சவரன், செல்போன் அபேஸ்

அண்ணாநகர்: ஆம்னி பஸ்சில் பயணித்தவருக்கு டீயில் மயக்க மருந்து கொடுத்து 4 பவுன் நகை, செல்போனை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை எருக்கஞ்சேரி, லட்சுமி அம்மன் நகரை சேர்ந்தவர் இளங்குமரன் (47), தனியார் நிறுவன ஊழியர். இவர், வேலை விஷயமாக மதுரை சென்று, அங்கிருந்து நேற்று ஆம்னி பஸ்சில் கோயம்பேடு புறப்பட்டார். உளுந்தூர்பேட்டை அருகே வந்தபோது, ஓட்டல் ஒன்றில் பஸ் நின்றது. அப்போது, பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த ஒருவர், இளங்குமரனுக்கு டீ வாங்கி கொடுத்துள்ளார். இவர் மறுத்த போதும், வலுக்கட்டாயமாக குடிக்க வைத்துள்ளார். அதை குடித்துவிட்டு பின்னர் இருவரும் பஸ்சில் அமர்ந்து சென்னை நோக்கி பயணித்தனர். சிறிது நேரத்தில் இளங்குமரனுக்கு மயக்கம் ஏற்பட்டு, அயர்ந்து தூங்கியுள்ளார்.

கோயம்பேடு வந்தவுடன் இளங்குமரனை நடத்துனர் எழுப்பி உள்ளார். அப்போது, அவர் அணிந்திருந்த 4 சவரன் செயின் மற்றும் மோதிரம், விலை உயர்ந்த செல்போன் ஆகியவை மாயமானது தெரிந்தது. மேலும், பக்கத்து சீட்டில் பயணித்தவர், டீயில் மயக்க மருந்து கொடுத்து, நகை, செல்போனை அபேஸ் செய்தது தெரிந்தது. இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: