×

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் வரும் 5ம் தேதி குடமுழுக்கு விழா : சிறப்பு ஏற்பாடுகள் தீவிரம்

சென்னை: திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் வரும் 5ம் தேதி குடமுழுக்கு விழா நடக்கிறது. இதில், லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.  சிவதலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில். இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் கடந்த 2008ம் ஆண்டு திருக்குடமுழுக்கு நடத்தப்பட்டது. ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடத்த வேண்டும். அதன்படி, மருந்தீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு நடத்த அறநிலையத்துறை முடிவு செய்தது. இதை தொடர்ந்து கடந்த ஜூன் 6ம் தேதி பாலாலயம் செய்யப்பட்டு கோயில்களில் ராஜகோபுரங்கள் மற்றும் அனைத்து சன்னதிகளுக்கும் திருப்பணிகள் நடந்தன. இந்நிலையில் வரும் 5ம் தேதி மருந்தீஸ்வரர், பரிவார தெய்வங்கள் மற்றும் ராஜகோபுரங்களுக்கு குடமுழுக்கு விழா நடக்கும் என, அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

இந்த குடமுழுக்கை முன்னிட்டு பிப்ரவரி 4ம் தேதி வரை காலை மற்றும் மாலை வேளைகளில் ஹோமம், பூஜைகள்,  2ம் தேதி முதல் மாலை 5.30 மணி முதல் யாக சாலை பூஜை, பிப்ரவரி 5ம் தேதி காலை 7 மணியளவில் ஆறாம் கால அவபிரதகால யாக சாலை பூஜைகள், காலை 9 மணிக்கு மஹா பூர்ணாஹுதி, யாத்திராதானம், க்ருஹபிரிதிதானம், காலை 9.30 மணிக்கு மேல் 10 மணி வரை ராஜகோபுரங்கள் மற்றும் விமான கோபுரங்களுக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓத திருக்குடமுழுக்கு நடக்கிறது. தொடர்ந்து மருந்தீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்படுகிறது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்படுகிறது. இதையடுத்து இரவு 7 மணியளவில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா, தியாகராஜசுவாமி திருக்கல்யாண வைபவம் மற்றும் திருவீதி உலா நடக்கிறது. விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், சேவூர் ராமச்சந்திரன், அரசு செயலாளர் அசோக் டோங்ரே, ஆணையர் பணீந்திர ரெட்டி உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் அருட்செல்வன் செய்து வருகிறார். குடமுழுக்கையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருவதாக அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

61 இடங்களில் கண்காணிப்பு கேமரா: தரமணி சரக காவல்துறை உதவி கமிஷனர் ரவி கூறுகையில், ‘‘மருந்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் பாதுகாப்புக்காக 10 உதவி துணை கண்காணிப்பாளர்கள், காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையை சேர்ந்த 700 பேரும், 10 குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். காலை 7 மணி முதல் 10 மணி வரை மூன்று மணி நேரம் அடையாறில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் ராஜிவ் காந்தி சாலை வழியாகவும் மாமல்லபுரத்தில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் அக்கரை, கலைஞர் கருணாநிதி சாலை வழியாக ராஜிவ் காந்தி சாலை செல்ல போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. கோயில் பகுதியில் ஏற்கனவே 29 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளன. மேலும் 32 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கோயில் நிகழ்ச்சிகளை பக்தர்கள் பார்க்க வசதிக்காக 2 எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன’’ என்றார்.

பார்க்கிங், குடிநீர், கழிப்பறை வசதி

இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஹரிப்பிரியா கூறுகையில், ‘‘வரும் 5ம் தேதி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக கோயில் வணிக வளாகம், கோயில் கல்யாண மண்டபம், ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டர், ஆனந்தா அபார்ட்மென்ட், கலாஷேத்திரா பவுண்டேஷன் ஆகிய இடங்களில் பார்க்கிங் வசதியும், மாநகராட்சி சார்பில் குடிநீர் மற்றும் கழிவறை வசதியும் செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

Tags : Kudumbamukku Festival ,Thiruvanmiyur Marisheeswarar Temple ,Thiruvanmiyur Marisivaswarar Temple , Kudumbamukku Festival ,Thiruvanmiyur Marisivaswarar Temple on 5th,Special preparations intensified
× RELATED திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்