ஆஸ்திரேலிய ஓபன் பைனலில் ஜோகோவிச்சுடன் டொமினிக் தீம் மோதல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில், ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் நடப்பு சாம்பியன் நோவாக் ஜோகோவிச்சுடன் (செர்பியா) மோதுகிறார். இரண்டாவது அரை இறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவுடன் (7வது ரேங்) நேற்று மோதிய டொமினிக் தீம் (5வது ரேங்க்) 3-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். 2வது செட்டில் அதிரடியாக புள்ளிகளைக் குவித்த அவர் 6-4 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 3வது மற்றும் 4வது செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. இரு வீரர்களும் மாறி மாறி புள்ளிகளைக் குவித்து முன்னேறியதால் டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த இந்த 2 செட்டிலும் டொமினிக் தீம் 7-6 (7-3), 7-6 (7-4) என்ற கணக்கில் வெற்றியை வசப்படுத்தி பைனலுக்கு முன்னேறினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 3 மணி, 42 நிமிடத்துக்கு நீடித்தது.

முதல் அரை இறுதியில் நேற்று முன்தினம் ரோஜர் பெடரருடன் மோதிய ஜோகோவிச் 7-6 (7-1), 6-4, 6-3 என நேர் செட்களில் வென்று பைனலுக்கு தகுதி பெற்றார். நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் ஜோகோவிச் - டொமினிக் தீம் மோதுகின்றனர். ஆஸி. ஓபனில் ஜோகோவிச் 7 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள நிலையில், தீம் முதல் முறையாக பைனலில் விளையாட உள்ளார். மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் நம்பர் 1 ஜோடியான சூ வெய் சை (சீன தைபே) - பார்போரா ஸ்டிரைகோவா (செக்.) ஜோடியுடன் மோதிய டிமியா பாபோஸ் (ஹங்கேரி) - கிறிஸ்டினா மிளாடெனோவிச் (பிரான்ஸ்) ஜோடி (2வது ரேங்க்) 6-2, 6-1 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று கோப்பையை முத்தமிட்டது. மகளிர் ஒற்றையர் பைனலில் அமெரிக்காவின் சோபியா கெனின் - கார்பினி முகுருசா (ஸ்பெயின்) இன்று மோதுகின்றனர்.

Related Stories:

>