×

மீண்டும் சூப்பர் ஓவரில் அசத்தல் 4வது டி20 போட்டியிலும் இந்தியா அபார வெற்றி

வெலிங்டன்: நியூசிலாந்து அணியுடனான 4வது ஒருநாள் போட்டியிலும் சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றியை வசப்படுத்திய இந்திய அணி 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் டி20 தொடர் நடந்து வருகிறது. ஆக்லாந்தில் நடந்த முதல் 2 போட்டிகளிலும் முறையே 6 விக்கெட் மற்றும் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, ஹாமில்டனில் நடந்த பரபரப்பான 3வது போட்டியில் சூப்பர் ஓவரில் வென்று 3-0 என முன்னிலை பெற்றதுடன் நியூசி. மண்ணில் முதல் முறையாக டி20 தொடரை கைப்பற்றி சரித்திர சாதனை படைத்தது. இந்த நிலையில், 4வது போட்டி வெலிங்டன் வெஸ்ட்பேக் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இந்திய அணியில் ரோகித், ஷமி, ஜடேஜாவுக்கு ஓய்வளிக்கப்பட்டு சாம்சன், சுந்தர், சைனி சேர்க்கப்பட்டனர். நியூசி. அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன் தோள்பட்டை காயம் காரணமாக இடம் பெறவில்லை. வில்லியம்சன், கிராண்ட்ஹோமுக்கு பதிலாக புரூஸ், டாரில் மிட்செல் இடம் பெற்றனர்.

டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசியது. ராகுல், சாம்சன் இருவரும் இந்திய இன்னிங்சை தொடங்கினர். சாம்சன் 8, கேப்டன் கோஹ்லி 11, ஷ்ரேயாஸ் 1, ராகுல் 39 ரன் (26 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), ஷிவம் துபே 12 ரன்னில் பெவிலியன் திரும்பினர். சுந்தர் டக் அவுட்டானார். இந்தியா 11.3 ஓவரில் 88 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து திணறிய நிலையில், மணிஷ் - தாகூர் ஜோடி 7வது விக்கெட்டுக்கு 43 ரன் சேர்த்தது. தாகூர் 20, சாஹல் 1 ரன்னில் பெவிலியன் திரும்ப, இந்தியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன் குவித்தது. மணிஷ் 50 ரன் (36 பந்து, 3 பவுண்டரி),  சைனி 11 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசி. பந்துவீச்சில் சோதி 3, பென்னட் 2, சான்ட்னர், குகலெஜின், சவுத்தீ தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 166 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. கப்தில், மன்றோ இருவரும் துரத்தலை தொடங்கினர். கப்தில் 4 ரன்னில் வெளியேற நியூசி.க்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. மன்றோ - செய்பெர்ட் இருவரும் 2வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 74 ரன் சேர்த்தனர். மன்றோ 64 ரன் (47 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ரன் அவுட்டானார். அடுத்து வந்த டாம் புரூஸ் டக் அவுட்டாகி வெளியேறினார்.

செய்பெர்ட் - ராஸ் டெய்லர் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 62 ரன் சேர்க்க, நியூசிலாந்து வெற்றியை நெருங்கியது. கடைசி ஓவரில் அந்த அணிக்கு 7 ரன் மட்டுமே தேவைப்பட்டது. தாகூர் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் டெய்லர் (24 ரன், 18 பந்து, 2 பவுண்டரி) தூக்கி அடித்து விக்கெட் தானம் செய்தார். அடுத்த பந்தை டாரில் மிட்செல் பவுண்டரிக்கு விரட்ட, 4 பந்தில் 3 ரன் தேவைப்பட்டது. அடுத்த பந்தில் செய்பெர்ட் (57 ரன், 39 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) தேவையில்லாமல் ரன் அவுட்டானார். 3 பந்தில் 3 ரன் என்ற நிலையில், 4வது பந்தை எதிர்கொண்ட சான்ட்னர் 1 ரன் எடுத்தார். 2 பந்தில் 2 ரன்... 5வது பந்தை சந்தித்த டாரில் தூக்கி அடித்த பந்தை துபே பிடித்து அவுட்டாக்கினார். கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்ட நிலையில், சான்ட்னர் முதல் ரன்னை பூர்த்தி செய்து 2வது ரன் எடுக்க ஓடியபோது ரன் அவுட்டானார். நியூசிலாந்து அணியும் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 165 ரன் எடுத்ததால் ஆட்டம் சரிசமனில் (டை) முடிந்தது.  பின்னர் சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டது.

சூப்பர் ஓவர் பரபரப்பு...

பூம்ரா வீசிய ஓவரில் இந்திய பீல்டர்கள் 2 கேட்ச் வாய்ப்பை வீணடிக்க... நியூசிலாந்து 1 விக்கெட் இழப்புக்கு 13 ரன் எடுத்தது. அடுத்து 6 பந்தில் 14 ரன் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராகுல், கோஹ்லி களமிறங்கினர். நியூசி. கேப்டன் சவுத்தீ வீசிய முதல் பந்தை சிக்சருக்கு தூக்கிய ராகுல், அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். 4 பந்தில் 4 ரன் தேவைப்பட்ட நிலையில் ராகுல் விக்கெட்டை பறிகொடுத்தார். எனினும், கோஹ்லி 4வது பந்தில் 2 ரன், 5வது பந்தில் பவுண்டரி அடித்து வெற்றியை வசப்படுத்தினார். ஷர்துல் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்தியா 4-0 என முன்னிலை வகிக்க, 5வது மற்றும் கடைசி டி20 போட்டி மவுன்ட் மவுங்கானுயி, பே ஓவல் மைதானத்தில் நாளை நடக்கிறது.

Tags : India ,match ,T20 match ,Super Over India , Back to the Super Over ,India wins, 4th T20 match
× RELATED மைதான் இந்தி விமர்சனம்