×

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறியது இங்கிலாந்து : ‘புதிய தொடக்கம்’ என பிரதமர் போரிஸ் நம்பிக்கை

லண்டன்: நாற்பது ஆண்டுகளாக பொருளாதாரம், அரசியல், சட்ட விவகாரங்களில் ஒருங்கிணைந்திருந்த ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முறைப்படி விலகியது. ‘இது முடிவல்ல, புதிய தொடக்கம்’ என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து, ஜெர்மனி, பெல்ஜியம், டென்மார்க், கிரீஸ், இத்தாலி உள்ளிட்ட 28 நாடுகள் இணைந்த ஐரோப்பிய கூட்டமைப்பு கடந்த 1973ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த உறுப்பு நாடுகளுக்குள் விசா இல்லாமல் பயணம் செய்யலாம், பணி புரியலாம். இதில் உறுப்பினராக இருந்தாலும், பொருளாதார ரீதியாக வலுவான நாடு என்பதால் இங்கிலாந்து தனித்தே செயல்பட்டது. கூட்டமைப்பின் பின்தங்கிய நாடுகளில் வசிப்பவர்கள் வேலை தேடி இங்கிலாந்துக்கு அதிகளவில் குடி பெயர்ந்தனர். இதன் காரணமாக ஐரோப்பிய கூட்டமைப்பில் இங்கிலாந்து இருப்பதை அந்நாட்டு மக்கள் விரும்பவில்லை. எனவே, கூட்டமைப்பில் நீடிப்பதா வேண்டாமா என்பது தொடர்பாக கடந்த 2016ல் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 58 சதவீதம் பேர் வெளியேற வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து, ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரக்சிட்’ நிகழ்வு தொடங்கியது.

அரசியல், பொருளாதாரம், சட்ட விவகாரங்களில் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுடன் 40 ஆண்டாக இங்கிலாந்து ஒருங்கிணைந்து செயல்படுவதால், பிரக்சிட் வெளியேற்றத்திற்கு பிறகு தனித்து செயல்படுவதற்கான ஒப்பந்தம் நிறைவேற்ற வேண்டி இருந்தது. ஆனால், பிரக்சிட்  ஒப்பந்தம் எளிதாக  நிறைவேறவில்லை. இந்த விவகாரத்தில் இங்கிலாந்தின் 2 பிரதமர்கள் ராஜினாமா செய்தனர். தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சனும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இன்றி தவித்தார். பிறகு நாடாளுமன்றத்தை கலைத்து, புதிதாக தேர்தலை சந்தித்து அமோக வெற்றி பெற்றார். இதனால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் கிடைத்ததால் அவரால் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடிந்தது. இந்த ஒப்பந்தம், ஐரோப்பிய கூட்டமைப்பிலும் நிறைவேற்றப்பட்டது.

இறுதியாக மூன்றரை ஆண்டுகள், அதாவது 43 மாத இழுபறிக்குப் பிறகு  ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட படி, உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 11 மணியுடன் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறியது. வெளியேற்றத்திற்கு முன்பாக நாட்டு மக்களிடம் உரையாற்றிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ‘‘இது முடிவல்ல. புதிய தொடக்கம். இத்தருணம் உண்மையான புத்தாக்கம், புதிய மாற்றம்’’ என உணர்ச்சிகரமாக பேசினார்.

இதுவே முதல் முறை

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து ஒரு நாடு வெளியேறுவது இதுவே முதல் முறை. கூட்டமைப்பின் எண்ணிக்கை 27 ஆக குறைந்துள்ளது.
இதனால், இது தங்களின் சோக தினம் என ஐரோப்பிய கூட்டமைப்பு கருத்து தெரிவித்தது. மேலும், தனியாக இருந்தால் அது இங்கிலாந்துக்கு பலன் அளிக்காது என்றும் எச்சரித்துள்ளது.

இந்தியாவுக்கு அதிர்ஷ்டம்

பொருளாதார ரீதியில் எந்தவொரு கொள்கையும் வகுக்கப்படாததால், பொருளாதாரம், வர்த்தகம், சட்ட விவகாரங்களில் முடிவு எடுக்க, இந்த ஆண்டு இறுதிவரை இங்கிலாந்துக்கு கால அவகாசம் உள்ளது. அதற்குள் ஐரோப்பிய கூட்டமைப்புடன் புதிதாக பொருளாதார ஒப்பந்தங்களை மேற்கொள்ளலாம். தவறும் பட்சத்தில் நிரந்தரமாக அது தனிமைப்படுத்தப்படும்.

அதே சமயம் இங்கிலாந்து தனியாக பிரிந்துள்ளது இந்தியாவுக்கு லாபகரமாக அமையும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இனி தொழில்துறையில் இந்தியா-இங்கிலாந்து மிக நெருக்கமான இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து நிறுவனங்கள் மருத்துவம் முதல் தொழில்நுட்பம் வரையிலான பல்வேறு துறையில் இந்தியாவில் முதலீடு செய்ய தயாராக இருக்கின்றன.

Tags : Boris ,European Union ,exit ,UK , Prime Minister Boris hopes ,leave, European Union
× RELATED குவாலிபயர்-2ல் விளையாட சன்ரைசர்ஸ் ஐதராபாத் தகுதி: ஆர்சிபி வெளியேற்றம்