×

டெல்லி ஜமியா பல்கலை. அருகே துப்பாக்கிச்சூடு நடத்த பணம் கொடுத்தது யார்? : ராகுல் காந்தி கேள்வி

புதுடெல்லி:  ‘டெல்லி ஜமியா  பல்கலை. அருகே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபருக்கு சம்பளம் கொடுத்தது யார்?’ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜமியா பல்கலைக் கழகத்தில் இருந்து ராஜ்காட் நோக்கி ஜமியா இஸ்லாமியா பல்கலைக் கழக மாணவர்கள், பொதுமக்கள் நேற்று முன்தினம் பேரணி நடத்தினார்கள். அப்போது, மர்ம நபர் ஒருவர் பேரணியில் கலந்து கொண்டவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

இதில் ஒருவர் காயமடைந்தார். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.  இந்நிலையில், சம்பந்தப்பட்ட நபருக்கு பணம் கொடுத்தது யார் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு வந்த ராகுலிடம், செய்தியாளர்கள் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து கருத்து கேட்டனர். இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, “ஜமியா துப்பாக்கிச் சூடு நபருக்கு சம்பளம் கொடுத்தது யார்?” என கேள்வி எழுப்பினார்.

மோடி எந்த பக்கம்? பிரியங்கா கேள்வி

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘பாஜ தலைமையிலான மத்திய அரசின் அமைச்சர்களும், கட்சித் தலைவர்களும் மக்களை துப்பாக்கிச்சூடு நடத்தும்படி தூண்டினால், ஆத்திரமூட்டும் பேச்சுக்களை பேசினால் இது போன்ற சம்பவங்கள் நடப்பது சாத்தியம்தான். எந்த மாதிரியான டெல்லியை கட்டமைக்க பிரதமர் மோடி விரும்புகிறார் என்பது குறித்து அவர் பதிலளிக்க வேண்டும். பிரதமர் மோடி வன்முறையின் பக்கம் நிற்கிறாரா? அல்லது அகிம்சையின் பக்கமா? பிரதமர் மோடி வளர்ச்சியின் பக்கமா? அல்லது அராஜகத்தின் பக்கம் நிற்கிறாரா?” என கேட்டுள்ளார்.

Tags : Jamia University ,Delhi , Jamia University, Delhi, gunfire ,Rahul Gandhi Question
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...