×

பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது வன்முறைகள் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் : நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி உரை

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனாதிபதி உரையுடன் நேற்று தொடங்கியது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது உரையில், குடியுரிமை திருத்த சட்டம் வரலாற்று சிறப்புமிக்கது என்றும், போராட்டம் என்ற பெயரில் நடக்கும் வன்முறைகள் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் என்றும் குறிப்பிட்டார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரு அவையின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றி தொடங்கி வைத்தார். அப்போது ஜனாதிபதி பேசியதாவது:
கடந்த 7 மாதத்தில், மத்திய அரசு பல முக்கிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி சாதனை படைத்துள்ளது. முத்தலாக் மசோதா மூலம் முஸ்லிம் பெண்களுக்கு நீதி கிடைத்துள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் மூலம் மக்களுக்கு உரிமை கிடைத்துள்ளது. மோட்டார் வாகன சட்டத்தின் மூலம் விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளது. இப்படி பல வரலாற்று சிறப்புமிக்க சட்டங்களை நிறைவேற்றி அரசியலமைப்பு கடமையை நிறைவேற்றிய எம்பி.க்களுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.

நம் ஜனநாயகத்தின் அடிப்படையான, ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்தி நாட்டு மக்களிடம் நம்பிக்கை விதைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான், ராம ஜென்ம பூமி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு நாட்டு மக்கள் அமைதி காத்து தங்களின் முதிர்ச்சியை பிரதிபலித்தனர். இது பாராட்டுக்குரியது. புதிய இந்தியாவுக்கான மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்நிய முதலீடுகளை ஈர்க்க இந்தியாவில் தொழில் தொடங்குவது எளிதாக்கப்பட்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய அனைவருக்குமான வளர்ச்சி என்ற கொள்கையின்படி, 8 கோடி மக்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 2 கோடி மக்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. 38 கோடி மக்களுக்கு வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. 50 கோடி மக்களுக்கு ரூ.5 லட்சம் செலவில் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 24 கோடி மக்கள் பயன் அடைந்துள்ளனர். 2.5 கோடி மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

கடந்த 70 ஆண்டுக்குப் பிறகு இன்று நாட்டின் பிற பகுதிகளைப் போல காஷ்மீர் மக்களும் இன்று அனைத்து உரிமைகளையும் பெற்றுள்ளனர். இதற்காக, சட்டப்பிரிவு 370, 35ஏ நீக்கப்பட்டது வரலாற்று சிறப்புமிக்கது மட்டுமின்றி ஜம்மு காஷ்மீர், லடாக்கின் வளர்ச்சிக்கும் பாதை வகுத்து தந்துள்ளது. கர்தார்பூர் வழித்தடம் திறக்கப்பட்டது வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இதன் மூலம், சீக்கியர்கள், தங்களது மத குருவை வழிபட முடியும். நாடு பிரிவினைக்கு பின்னர், பாகிஸ்தான், வங்கதேசத்தை சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் உள்ளிட்டோர் அடைக்கலம் கேட்டால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என தேசத் தந்தை மகாத்மா காந்தி கூறியுள்ளார். தேசத்தந்தையின் விரும்பத்தை நாம் மதிக்க வேண்டும். அவரின் கனவை நிறைவேற்றும் வகையில்தான் குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காந்தியின் 150ம் ஆண்டு நினைவு தினம் கொண்டாடும் வேளையில் இந்த வரலாற்று சிறப்புமிக்க சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விவாதங்களும், ஆலோசனைகளும் ஜனநாயகத்தை வலுப்படுத்தும். ஆனால், போராட்டம் என்ற பெயரில் நடக்கும் வன்முறைகள் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தி விடும்.

இந்த அரசு நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய ராணுவத்திற்கு முழு சுதந்திரத்தை அளித்துள்ளது. மேலும், நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுவான அடித்தளமிடப்பட்டுள்ளது. எப்போதும் இல்லாத அளவுக்கு அந்நிய செலாவணி கையிருப்பில் உள்ளது. மேக் இன் இந்தியா உள்ளிட்ட தொழில் துறையின் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களுடன் நாட்டின் பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி அமெரிக்க டாலராக உயர்த்த அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, நாட்டு மக்கள் அனைவரையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். சிறப்பான எதிர்காலம் அமைய, உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். உள்நாட்டு தயாரிப்பு பொருட்களை வாங்கி பயன்படுத்துங்கள். இதன் மூலம் உங்கள் பகுதியின் சிறு நிறுவனங்கள் வளர்ச்சி அடையும். நாட்டின் பொருளாதாரம் பெருகும். இது மக்கள் இயக்கமாக மாற வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார். ஜனாதிபதி உரையைத் தொடர்ந்து இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-21ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இக்கூட்டத்தொடர் முதற்கட்டமாக வரும் 11ம் தேதி வரையிலும், பின்னர் 2ம் கட்டமாக மார்ச் 2ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரையிலும் நடக்க உள்ளது.

அதே பழைய பல்லவி

ஜனாதிபதி உரை குறித்து காங்கிரஸ் தனது டிவிட்டர் பதிவில், ‘ஏற்கனவே பலமுறை கேட்டு புளித்துப் போன, எந்த அர்த்தமும் இல்லாத  அதே பழைய பல்லவியை தனது உரையில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஆனால், பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு, வேலை இழப்பு அதிகரிப்பு, விலைவாசி உயர்வு, ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் மூடப்பட்டது, சிறு குறு தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் கடுமையான பாதிப்பு ஆகியவை குறித்து ஒருவார்த்தை கூட பேசாதது வருத்தம் அளிக்கிறது,’ என கூறப்பட்டுள்ளது..

ஜனாதிபதி கூறிய திருக்குறள்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த தனது உரையில், திருக்குறளை மேற்கோள்காட்டி பேசுகையில், ‘‘புனிதப் புலவர் திருவள்ளுவர் கூறியிருக்கிறார், ‘‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்’’ என்று. அதாவது. வண்டிக்கு அச்சாணி எவ்வளவு முக்கியமோ அது போல ஒரு நாட்டுக்கு விவசாயி முக்கியம். விவசாயம் செய்ய முடியாதவர்களின் பாரத்தையும் சேர்த்து அவர்கள் சுமக்கிறார்கள். அப்படிப்பட்ட விவசாயிகள் நலனுக்காக இந்த அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. பிஎம்-கிசான் திட்டத்தின் கீழ் 8 கோடி விவசாயிகளுக்கு ரூ.43,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்காக ரூ.25 ஆயிரம் கோடி செலவிடப்பட உள்ளது,’’ என்றார்.

Tags : speech ,parliament ,session , Violence weakens democracy, Presidential speech a, joint session of parliament
× RELATED இந்தியா அமல்படுத்தியுள்ள...