தவறான உறவு வைத்துள்ளதாக கூறி திருமணத்துக்கு மறுக்கிறார் நடிகர் மீது கமிஷனர் ஆபீசில் நடிகை ஷனம் ஷெட்டி பரபரப்பு புகார்

சென்னை: மாடல் அழகியும், நடிகையுமான ஷனம் ஷெட்டி ‘கதம் கதம், சதுரம்-2 திரைப்படங்கள் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். தற்போது சிம்புவுடன் கதாநாயகியாக ‘மகா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர், இலங்கையை சேர்ந்த நடிகர் தர்ஷன் என்பவருடன் காதல் ஏற்பட்டு பல இடங்களில் ஒன்றாக சுற்றி வந்தார்.நடிகர் சிம்புடன் நடிக்கும் திரைப்படத்தில் சில காட்சிகள் அவருடன் நெருக்கமாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரது காதலன் தர்ஷனுக்கும் நடிகை ஷனம் ஷெட்டிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை ஷனம் ஷெட்டி தனது காதலன் தர்ஷன் மீது நேற்று பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.பின்னர் நடிகை ஷனம் ஷெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:இலங்கையை சேர்ந்த தர்ஷன் என்பவரை நான்தான் மாடலிங் துறைக்கு அழைத்து வந்தேன். இருவரும் நண்பர்களாக பழகி வந்தோம். பின்னர் 2018 ஜனவரி மாதம் தர்ஷன் என்னை காதலிப்பதாக கூறினார். நானும் அவருடைய காதலை ஏற்றுக் கொண்டேன். இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து மிகவும் நெருக்கமாக பழகினோம்.சிங்கப்பூர், இலங்கை உள்பட பல்வேறு நாடுகளுக்கு இருவரும் சேர்ந்து பயணம் செய்தோம். சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் உள்ள என்னுடைய இல்லத்தில் நானும், தர்ஷனும் பல நாட்கள் ஒன்றாக தங்கி இருக்கிறோம். விருது நிகழ்ச்சிகள், இரவு விருந்து போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக சென்று இருக்கிறோம். சமூக வலைத்தளங்களிலும் நாங்கள் நெருக்கமாக இருக்கும் படங்கள், வீடியோக்களும் உள்ளது.

எங்கள் காதல் விவகாரம் தெரிந்து பெற்றோர் சம்மதத்துடன் எனக்கும், தர்ஷனுக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது கடந்த ஜூன் 10ம் தேதி பெற்றோர் சம்மதத்துடன் திருமண தேதி முடிவு செய்யப்பட்டது. என்னுடைய சிபாரிசில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தர்ஷனுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதனால் எங்கள் திருமணத்தை சற்று தள்ளி போட்டார். அப்போது அவர் என்னிடம், நம்முடைய திருமண செய்தி வெளியில் தெரிய கூடாது. தெரிந்தால் பெண் ரசிகைகள் ஆதரவு எனக்கு கிடைக்காது. இதனால்  நிகழ்ச்சியில் என்னால் ஜொலிக்க முடியாது. எனவே  நிகழ்ச்சி முடிந்தவுடன் திருமணம் செய்துக் கொள்ளலாம் என்று கூறினார். நானும் அதை ஏற்றுக் கொண்டு அவரை  நிகழ்ச்சிக்கு ஆசையுடன் அனுப்பி வைத்தேன். பின்னர் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தவுடன் தர்ஷன் முற்றிலும் மாறிவிட்டார். என்னுடன் பேசுவதை தவிர்த்தார். நண்பர்களிடையே என்னை அவமானப்படுத்தினார். ஏன் இப்படி நடந்துக் கொள்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் ‘நீ படத்தில் நடிக்கிறது எனக்கு பிடிக்கவில்லை. நடிகர்களுடன் நீ மோசமாக நடிக்கிறாய். தவறான உறவு வைத்துள்ளாய். உன் கேரக்டர் எனக்கு பிடிக்கவில்லை’ என்று கூறி என்னை மனதளவில் காயப்படுத்தினார். ‘உன்னை போன்று ஒரு நடிகை என் வாழ்க்கையில் இருந்தால் என்னால் முன்னேற முடியாது’ என்றும் கூறிவிட்டார்.

இதுகுறித்து தர்ஷன் பெற்றோரிடம் நான் முறையிட்டேன். அவர்களும் எனக்கு உதவி செய்யவில்லை. இலங்கையில் இருந்து சுற்றுலா விசாவில் வந்த அவருக்கு பணியாளர் விசாவை நான் தான் வாங்கி கொடுத்தேன். அதுமட்டுமின்றி அவருக்கு ஆடை, பயண செலவு எல்லாம் நான்தான் செய்தேன். அவருக்கு ரூ.15 லட்சம் வரை செலவு செய்திருக்கிறேன். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளேன் என்றார்.

Related Stories: