×

தஞ்சை பெரிய கோயிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்த ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தஞ்சை பெரிய கோயிலில் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு விழாவை நடத்தி, அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சை பெருவுடையார் (பெரிய) கோயிலில் வரும் பிப். 5ல் குடமுழுக்கு விழா நடக்கிறது. இந்த குடமுழக்கு விழாவை தமிழில் நடத்தக் கோரி ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணையை சேர்ந்த வக்கீல் திருமுருகன், தஞ்சையைச் சேர்ந்த செந்தில்நாதன், கரூர் வக்கீல் தமிழ் ராஜேந்திரன், தமிழ்தேச பொதுவுடமை கட்சித்தலைவர் பெ.மணியரசன் ஆகியோர் மனு செய்திருந்தனர். இந்த மனுக்களை நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் விசாரித்தனர். தஞ்சை தேவஸ்தானம் மற்றும் அரசுத் தரப்பில், ‘‘குடமுழுக்கு விழா பணிகள் சிவனடியார்கள் மூலம் நடக்கின்றன. யாகசாலை மற்றும் மகா அபிஷேகம் ஆகியவை ஓதுவார்கள் மூலம் தமிழில் பாடப்படும். இவற்றில் ஏராளமான ஓதுவார்களும், குழந்தைகளும் பங்கேற்கின்றனர். திருமுறை பண்ணிசை, அகண்ட பாராயணம் உள்ளிட்டவை வாசிக்கப்படும். குடமுழுக்கு விழா தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் நடக்கும். தமிழுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும்’’ என வாதிடப்பட்டது.

மனுதாரர்கள் தரப்பில், ‘‘குடமுழுக்கு விழா முழுமையாக தமிழில்தான் நடக்க வேண்டும். யாகசாலை மட்டுமின்றி கருவறைக்குள்ளும், கோபுரத்தில் குடமுழுக்கு நடத்தும்போதும் என அனைத்து நிலைகளிலும் தமிழ் இடம் பெற வேண்டும்’’ என வாதிடப்பட்டது. அரசு மற்றும் தேவஸ்தானம் தரப்பில் கூறப்பட்ட தகவல்களை பிரமாண பத்திரமாக (அபிடவிட்) தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.இதன்படி, அரசு மற்றும் தேவஸ்தானம் சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர். ‘‘தமிழக அரசும், தேவஸ்தானமும் தாக்கல் செய்த அபிடவிட்டில் கூறியுள்ளபடி, தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை தமிழ், சமஸ்கிருதத்தில் நடத்த வேண்டும். உறுதியளித்தபடி நடத்தியது தொடர்பான அறிக்கையை 4 வாரத்தில் இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அரசியல் அமைப்பு சட்டத்தை மீறும் நிலை ஏற்பட்டால்தான் மதவழிபாடு போன்ற விஷயங்களில் நீதிமன்றம் தலையிடும். அதுபோன்று இல்லாததால் இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன’’ என்று உத்தரவிட்டுள்ளனர்.Tags : Icort Branch ,Mass Icort Branch , Icort Branch, hold , Tamil-Sanskrit, Mass
× RELATED டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடக் கோரிய மனு..: ஐகோர்ட் கிளை தள்ளுபடி