×

குரூப் 4 தேர்வில் புதிதாக 39 பேருக்கு ரேங்க் பட்டியல் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அதிரடி நடவடிக்கை

சென்னை: குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை நீக்கிவிட்டு புதிதாக 39 பேருக்கான ரேங்க் பட்டியலை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவியில் (2018-19, 2019-20ம் ஆண்டுக்கானது) காலியாக உள்ள 9,398 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வை கடந்த செப்டம்பர் 1ம் தேதி நடத்தியது. சுமார் 16.30 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தொடர்ந்து நவம்பர் 12ம் தேதி தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 39 பேர் முதல் 100 இடங்களுக்குள் வந்தனர். அனைவரும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள். இதனால் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது சம்பந்தமாக நடந்த விசாரணையில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியலில் வந்துள்ள 39 தேர்வர்களுக்கு பதில் தகுதியான வேறு 39 பேர் தெரிவு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.

இந்நிலையில் புதிதாக 39 பேருக்கான தரவரிசைப்படியலை டிஎன்பிஎஸ்சி தனது இணையதளமான www.tnpsc.gov.inல் நேற்று வெளியிட்டது. புதிதாக சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 1ம் தேதி (இன்று) முதல் 7ம் தேதி வரை தங்களது மூலச்சான்றிதழ்களை ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும். சான்றிதழ்களை குறிப்பிட்ட நாட்களுக்குள் பதிவேற்றம் செய்யவில்லை எனில் அந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வில் கலந்துகொள்ள விருப்பமில்லை என கருதி அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு பின்னர் கலந்தாய்வு நடைபெறும். அதற்கான தேதி விரைவில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

Tags : DNBSC Action ,Group 4 ,recruits , Group 4 picks,new rank list, 39 new recruits:,DNBSC Action
× RELATED திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் குரூப்...