×

சிஏஏ, என்பிஆர், மற்றும் என்ஆர்சிக்கு எதிராக தமிழக மனித சங்கிலியில் 40 லட்சம் பேர் பங்கேற்பு

சென்னை: சிஏஏ, என்.பி.ஆர், மற்றும் என்.ஆர்.சிக்கு எதிராக தமிழகம் முழுவதும் 40 லட்சம் பேர் மனித சங்கிலி இயக்கத்தில் பங்கேற்றனர். அவர்களுக்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் ஒருங்கிணைப்பாளர்கள் அருணன், உதயக்குமார் நன்றி கூறினர்.இதுதொடர்பாக, அவர்கள் கூறியதாவது:தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் 30ம் தேதி மாலை மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி, குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய மும்முனை தாக்குதலை கண்டித்து சென்னை மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் தாலுகா, தலைநகர் மற்றும் பல பேரூராட்சிகளிலும் தமிழகம் தழுவிய அளவில் நடந்த மனிதசங்கிலி இயக்கம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. தமிழக போராட்ட வரலாற்றில் இது ஒரு புதுமை.குறிப்பாக, சென்னை நகரில் 37 கிலோ மீட்டருக்கு மேல் பலதரப்பு மக்களும் பங்கு கொண்ட மனித சங்கிலி இயக்கம் பல இடங்களில் மனிதச் சுவராக  நின்று காட்சியளித்த நிகழ்ச்சி சென்னை நகரம் இதுவரை காணாத காட்சியாகும். இதேபோல் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நீண்ட நெடிய மனிதசங்கிலி இயக்கங்கள் நடந்துள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 40 லட்சம் பேர் மனித சங்கிலி இயக்கத்தில் பங்கு கொண்டுள்ளனர்.

இந்த மனித சங்கிலி இயக்கத்தில் அரசியல் கட்சியின் தலைவர்கள், ஊழியர்கள், கட்சி சார்பற்ற பல்வேறு பிரபலங்கள், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள், கட்சி சார்பற்ற பல்வேறு நிறுவனங்கள், மாணவர், வாலிபர், மாதர் அமைப்புகள், மனித உரிமை இயக்கங்கள், கல்வியாளர்கள், அரசு சாரா நிறுவனங்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், வியாபார பிரமுகர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட சமுதாயத்தின் அனைத்துப் பகுதி மக்களும் இந்த பேரியக்கத்திற்கு ஆதரவு அளித்து கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் சி.ஏ.ஏ, என்.பி.ஆர், மற்றும் என்.ஆர்.சி, ஆகியவற்றிற்கு எதிரான இந்த எழுச்சிமிக்க போராட்டத்தை கண்டாகிலும் மத்திய, மாநில அரசுகள் இவற்றை கைவிட வேண்டும்.இவ்வாறு கூறினர்.


Tags : NPR ,CAA ,Tamil Nadu ,NRC , 40 lakhs,participating, human chain, CAA, NPR ,NRC
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...