×

நிர்பயா பாலியல் படுகொலை வழக்கில் 4 குற்றவாளிகளை இன்று தூக்கிலிட தடை: டெல்லி நீதிமன்றம் 2ம் முறை தள்ளிவைப்பு

புதுடெல்லி: நிர்பயா பாலியல் படுகொலை வழக்கில் 4 குற்றவாளிகளை இன்று தூக்கிலிட தடை விதித்தது டெல்லி ஐகோர்ட்.  டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, விஜய் குமார் சர்மா மற்றும் அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து மேற்கண்ட நான்கு குற்றவாளிகளுக்கும் இன்று காலை 6 மணிக்கு தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டு இருந்தது.  தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் 4 குற்றவாளிகளும் மனு தாக்கல் செய்தனர். மேற்கண்ட மனு, டெல்லி பாட்டியாலா நீதிமன்ற நீதிபதி தர்மேந்தர் ராணா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.பி.சிங் வாதத்தில்,”குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பியுள்ளார். அதில் முடிவு தெரியும் வரை மற்றவர்களின் தண்டனையை நிறைவேற்ற முடியாது என வாதிட்டார்.

இதையடுத்து மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இர்பான் அகமது,மற்ற மூவருக்கும் பிப்ரவரி 1ம் தேதி (இன்று) தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என வாதிட்டார். வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,”நிர்பயா பாலியல் வழக்கு விவகாரத்தில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கிறது. இது அடுத்த உத்தரவு வரும் வரை தொடரும். இது குறித்து உத்தரவு திகார் சிறைத்துறை நீதிமன்ற சட்ட விதிகளுக்கு உட்பட்டு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தார். . இதில் குற்றவாளிகளுக்கான தூக்கு தண்டனையை நீதிமன்றம் தள்ளிவைப்பது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பவன் குமார் மனு தள்ளுபடி
நிர்பயா வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா சிறார் சட்டப்பிரிவுகளின் கீழ் தனக்கு தண்டனை வழங்க வேண்டும் எனக்கூறி உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் மறுஆய்வு மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து மனுவை விசாரித்த மூத்த நீதிபதிகள் பானுமதி, அசோக்பூஷன் மற்றும் போபன்னா ஆகியோர் அமர்வு, அதில் முகாந்திரம் இல்லை எனக்கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags : Delhi ,convicts , Delhi court, postponement, 4 convicts , Nirbhaya murder case
× RELATED சிறையில் இருந்து ஆட்சி நடத்த...