×

கடும் நிதி நெருக்கடி உள்ள நிலையில் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்: வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படுமா?

புதுடெல்லி: கடும் நிதி நெருக்கடியில் அரசு உள்ள நிலையில், வரும் 2020-21 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். இதில், வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படுமா?, தொழில் துறைகளுக்கு ஏற்ப சலுகைகள் மற்றும் வரி குறைப்பு மேற்கொள்ளப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாடாளுமன்றத்தில் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாத கடைசியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இதை பிப்ரவரி 1ம் தேதிக்கு பாஜ தலைமையிலான மத்திய அரசு கடந்த 2017ல் மாற்றியது. மத்திய பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டும் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2020-21ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று காலை 11 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இது இவர் தாக்கல் செய்யும் 2வது பட்ஜெட். கடந்த ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி அப்போதைய தற்காலிக நிதி அமைச்சர் பியூஷ் கோயல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். பின்னர் மத்தியில் பாஜ 2வது முறையாக ஆட்சிப்பொறுப்பு ஏற்ற பிறகு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல், வரும் மார்ச் வரையிலான நடப்பு நிதியாண்டின் முழுமையான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இன்று பட்ஜெட் தாக்கல் செய்வதை முன்னிட்டு, பொருளாதார ஆய்வறிக்கை மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் எதிர்பார்ப்புகள்: இதுவரை வருமான வரி விலக்கு உச்சவரம்பில் 6 ஆண்டுகளாக எந்த மாற்றத்தையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. பின்னர் ₹2.5 லட்சம் முதல் ₹5 லட்சம் வரை வசூலிக்கப்படும் வரி 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. பிறகு, 5 சதவீத வரியான ₹12,500 தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் வரி வரம்பில் மாற்றம் செய்யவே இல்லை.

இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் 5 சதவீத வரி விதிக்கப்படும் வருமான வரி வரம்பு ₹2.5 லட்சம் முதல் ₹7 லட்சம் என நிர்ணயிக்கப்படலாம். இதுபோல் ₹7 லட்சம் முதல் ₹10 லட்சம் வரை வருவாய் ஈட்டுபவர்களுக்கு 10 சதவீத வரி, ₹10 லட்சத்துக்கு மேல் ₹20 லட்சம் வரை ₹20 சதவீத வரி நிர்ணயிக்கலாம்.  முதலீட்டுக்கு வரி விலக்கு:  80 சி பிரிவின் கீழ், சில முதலீடுகளுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இது ₹லட்சத்தில் இருந்து ₹1.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதுபோல் வீட்டுக்கடன் வட்டிக்கான வருமான வரி விலக்கு வரம்பு ₹2.5 லட்சத்தில் இருந்து ₹2 லட்சமாக அதிகரிக்கப்பட்டது. இந்த வரம்பை மேலும் உயர்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ரியல் எஸ்டேட்:  பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி ஆகியவற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட துறைகள் ஆட்டோமொபைல் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகள்தான். இந்த இரண்டு துறையினரும் பட்ஜெட்டில் பெரிய அளவில் அறிவிப்புகளை எதிர்பார்க்கின்றனர்.  வெளிநாடுகளை போல அனைத்து வங்கிகளிலும் 5 சதவீத வட்டியில் வீட்டுக்கடன் வழங்க வழி வகை செய்ய வேண்டும். வங்கிகளில் பில்டர்களுக்கான கட்டுமான கடன் விகிதம் 11 முதல் 12 சதவீதமாக உள்ளது. இதை 9 சதவீதமாக குறைக்க வேண்டும். இதுபோல் கட்டுமான பொருட்கள் அனைத்துக்கும் ஜிஎஸ்டி வரி மிக அதிகமாக உள்ளது. இவற்றை குறைக்க வேண்டும். குறிப்பாக, சிமென்ட் மீதான ஜிஎஸ்டியை 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

சிறு குறு தொழில்கள்:  நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சிறு, குறுந்தொழில்கள் 8 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. எனவே, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கு வழங்கப்படும் கடன் வட்டியை 7 சதவீதமாக குறைக்க வேண்டும்.  குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான வருமான வரி 35 சதவீதமாக உள்ளது. ஆனால் பெரு நிறுவனங்களுக்கான வரியை மத்திய அரசு சமீபத்தில் அதிரடியாக குறைத்தது. இதுபோல், குறு, சிறு நடுத்தர தொழில்துறையினருக்கும் வரியை குறைக்க வேண்டும் என இத்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.ஜாப்ஒர்க் வரி: பின்னலாடை ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் மானியங்களை வழங்கி வந்த மத்திய அரசு, தற்போது அதை படிப்படியாக குறைத்து வருகிறது. எனவே, மீண்டும் மானியத்தை அதிகப்படுத்துவதற்கான அறிவிப்புகளை பட்ஜெட்டில் வெளியிட வேண்டும். பனியன் நிறுவனங்களில் கட்டிங் செய்த பனியன், ஜட்டிகளை தைத்து பிழைப்பு நடத்துவோரும் ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என்ற நிலை உள்ளது. எனவே, ஜாப் ஒர்க் பில்களுக்கு ஜிஎஸ்டியில் விலக்கு அளிக்க வேண்டும். நடைமுறை சிக்கல்களை களைய வேண்டும் என பின்னலாடை துறையினர் கோருகின்றனர்.  ஏற்றுமதியில் தொழில்நுட்பம் சார்ந்த முதலீடுகளை அதிகரிக்க வேண்டியுள்ளது. எனவே, ஆர் அண்ட் டி செலவினங்களில் 200 சதவீத தேய்மானம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

ஆட்டோமொபைல் துறை நாட்டின் மொத்த  உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. கடந்த ஆண்டுகளில்  விற்பனை சரிவால் பல லட்சம் பேர் இத்துறையில் வேலை இழந்தனர். எனவே, ஆட்டோமொபைல் உதிரிபாகங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்க வேண்டும். பேட்டரி  வாகன தயாரிப்பு செலவில் லித்தியம் அயன் பேட்டரிக்கு மட்டுமே 45 சதவீதம்  ஆகிறது. எனவே, இதன் இறக்குமதி வரி 5 சதவீதத்தை ரத்து செய்ய வேண்டும்.  உள்நாட்டில் பேட்டரி உற்பத்தியை ஊக்குவிக்க வகை செய்ய வேண்டும் என  கோரியுள்ளனர்.  நகைத்துறையினரை பொறுத்தவரை இறக்குமதி தங்கத்துக்கு  வரி 12.5 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இதை 4 சதவீதமாக குறைக்க வேண்டும்.  இதனால் விலை சவரனுக்கு ₹4,000 வரை குறையும் என்கின்றனர். ரயில்வே துறையில் தமிழகத்துக்கு என புதிய திட்டங்கள் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Tags : crisis , Amidst,financial crisis,federal budget , Will the income tax ,raised
× RELATED மோடி அரசு தரும் நெருக்கடி:...