×

கரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க சுமார் நூறு கோடி நிதி வழங்கினார் அலிபாபா நிறுவன அதிபர் ஜாக் மா

பீஜிங்: கரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க சுமார் நூறு கோடி ரூபாய் நிதியை அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் ஜாக் மா சீன அரசுக்கு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் வுஹான் நகரம் முழுவதும் பரவிய கரோனா வைரஸ் உலக நாடுகள் பலவற்றுக்கும் பரவி வருவதால் உலகச் சுகாதார அமைப்பு சுகாதார நெருக்கடி நிலையை பிரகடனம் செய்துள்ளது.

சீனாவில் இதுவரை 213 பேர் பலியாகியுள்ளனர். வுஹான் நகரின் 1 கோடிக்கும் மேலானோர் கிட்டத்தட்ட வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து முடக்கப்பட்டு, தெருக்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. மருத்துவமனைகளில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதாக சீனாவிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சீனாவின் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் ஜாக் மா, தனது தொண்டு நிறுவனம் மூலம் சீன அரசுக்கு நிதியுதவி அளித்துள்ளார். இதில் சுமார் 41 கோடி ரூபாய் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள, இரண்டு அரசு ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ளது. மீதி தொகை நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 18 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் இந்த வைரஸ் தோற்று காரணமாக மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் சீனாவில் இருந்து கேரளா வந்த மாணவி ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த மாணவியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Jack Ma ,Alibaba ,CORONA , CORONA
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...