×

மேட்டுப்பாளையம் அருகே 48 நாட்கள் நடைபெற்ற யானைகள் புத்துணர்வு முகாம் நிறைவு

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டியில் கடந்த மாதம் 15ம் தேதி முதல் 48 நாட்கள் நடந்து வந்த யானைகள் புத்துணர்வு முகாம் இன்று நிறைவு பெற்றது. தமிழக இந்து அறநிலையத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள கோயில் மற்றும் மடங்களில் உள்ள யானைகளுக்கு புத்துணர்வு முகாம் 12வது ஆண்டாக மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டியில் கடந்த மாதம் 15ம் தேதி துவங்கியது. இந்த முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மொத்தம் 28 கோயில் யானைகள் கலந்து கொண்டன.

இந்த யானைகளுக்கு சத்தான ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டது. மேலும் யானைகளின் புத்துணர்ச்சிக்காக காலை, மாலை நேரங்களில் நடைப்பயிற்சி, ஷவர் குளியல், பசுந்தீவனங்கள் அளிக்கப்பட்டது. இதனால், யானைகள் முகாமில் குதூகலமாக இருந்தது. மேலும், அனைத்து யானைகளுக்கும் ஹெல்த் கார்டு வழங்கப்பட்டு, யானைகளின் உடல்நிலை குறித்து கால்நடை மருத்துவர்கள் ஆய்வு செய்தனர். யானைகளின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டது. இதில் காயமடைந்த யானைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த யானை முகாமினை கோவை மட்டுமின்றி வெளி மாவட்ட மற்றும் வெளிமாநிலம், வெளிநாட்டை சேர்ந்த பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இந்த நிலையில் 48 நாட்கள் நடைபெற்ற யானைகள் புத்துணர்வு முகாம் இன்று நிறைவு பெற்றது. இதற்காக யானைகளை வரிசையாக நிற்க வைத்து பழம், கரும்பு கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக யானைகள் காலை முதலே தயார் செய்யப்பட்டன. யானைகள் குளித்து முடிந்து நெத்தி பட்டை, படுதா, மாலை என அலங்கார ஆடைகள் அணிந்து வந்து போஸ் கொடுத்தன.

இதில் பேரூர் கல்யாணி, ராமேஸ்வரம் ராஜலட்சுமி, மயிலாடுதுறை அபயாம்பிகை யானைகள் தும்பிக்கைகளை ஒன்றோடு ஒன்றாக பிடித்து கொண்டு பிரியும் சோகத்தை பகிர்ந்து கொண்டன. இதனை கண்ட பார்வையாளர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து பழநி கோயில் யானை கஸ்தூரிக்கு சிறப்பு பூஜைகள் செய்து இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் (தலைமையிடம்) மங்கையர்கரசி, கோவை இணை ஆணையர் ராஜமாணிக்கம் ஆகியோர் பழம், கரும்பு கொடுத்து முகாமை நிறைவு செய்தனர். பின்னர் அணிவகுத்து நின்ற அனைத்து யானைகளும் அதிகாரிகள் பழம், கரும்பு கொடுத்தனர். இதை தொடந்து இன்று மாலை யானைகள் அனைத்தும் லாரிகளில் ஏற்றப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அப்போது சில யானைகள், லாரிகளில் ஏற மறுத்து அடம்பிடித்தன. இதைப்பார்த்து பார்வையாளர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

Tags : Elephants Rejuvenation Camp ,Mettupalayam ,Elephants Refreshment Camp , Elephants Refreshment Camp
× RELATED மோடி ஆட்சியை பார்த்து ஐநா சபையே சிரிக்கிறது