×

செய்துங்கநல்லூர் மாணவி தற்கொலை: ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி 2வது நாளாக போராட்டம்

நெல்லை: தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பிள்ளையார் கோயில் வடக்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள் (45). செங்கல்சூளை தொழிலாளி. இவரது இரண்டாவது மகள் பேச்சியம்மாள் (15). பாளையிலுள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவர் மதிப்பெண்கள் குறைவாக எடுத்ததாக கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது வகுப்பு ஆசிரியை, மாணவியை கண்டித்ததோடு பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வர தெரிவித்தார். அதன்படி மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு வந்த நிலையில் ஒரு மணி நேரம் அவர்களை நிற்க வைத்து பேசி, வேறு பள்ளியில் மாணவியை சேர்க்குமாறு கூறியுள்ளனர். அதையும் மீறி பள்ளிக்கு சென்ற மாணவியை தினமும் திட்டி, அடித்துள்ளனர்.

இதனால் மனம் உடைந்த மாணவி பேச்சியம்மாள் கடந்த 29ம் தேதி பெற்றோர் வேலைக்கு சென்ற போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து பேச்சியம்மாள் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் பேச்சியம்மாள் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளி முன்பு நேற்று மதியம் முதல் 4 மணி நேரம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதோடு உடலை வாங்க மறுத்து விட்டனர். மாணவி தற்கொலைக்கு காரணமான பள்ளி ஆசிரியை மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனையடுத்து அங்கு வந்த பாளை உதவி கமிஷனர் பெரியசாமி, இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பள்ளியிலிருந்து மாணவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கலைந்து சென்றனர். கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை கலெக்டர் ஷில்பா, கமிஷனர் தீபக் எம். தாமோர், நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு ஆகியோரிடம் மனு கொடுத்தனர்.

மாணவியை தற்கொலைக்கு தூண்டிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று 2வது நாளாக உடலை வாங்க மறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Kalinganallur ,Strike ,teacher Suicide , Suicide
× RELATED செங்கல்பட்டில் ரயில் மறியல்: விவசாயிகள் கைது