×

குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றும் வரை தொடர்ந்து போராடுவேன்: நிர்பயாவின் தாயார் கண்ணீர் மல்க பேட்டி

டெல்லி: குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற தடை விதிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து போராடுவேன் என பாலியல் கொலை செய்யப்பட்ட நிர்பயாவின் தாயார் ஆசா தேவி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். நிர்பயா கொலை குற்றவாளிகள் 4 பேருக்கு நாளை காலை தூக்கு தண்டனை நிறைவேற்ற தடை விதித்து டெல்லி பாட்டியாலா விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாளை காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஜனவரி 22 ஆம் தேதி தூக்கிலிடுவதாக இருந்த நிலையில், பிப்ரவரி-01ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 2வது முறையாக நாளையும் தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட நிர்பயாவின் தாயார் கூறுகையில், தூக்கில் போட மாட்டார்கள் என குற்றவாளிகளின் வழக்கறிஞர் சவால் விடுகிறார் என்று கூறியுள்ளார். தண்டனை அளிக்கும் வரை தொடர்ந்து போராடுவேன். அரசு அவர்களை தூக்கில் போட வேண்டும் என நிர்பயாவின் தாயார் ஆசா தேவி கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற நிர்பயா பாலியல் வழக்கு கொலை குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்‌ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் நாளை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதாக இருந்தது. ஆனால் தற்போது குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் ஒருவருடைய கருணை மனு நிலுவையில் இருப்பதால் தண்டனை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

2012ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் நாளை காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற டெல்லி கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையில் குற்றவாளிகள் 4 பேரும் தனித்தனியாக சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தனர். குற்றவாளிகளில் ஒருவனான பவன் குப்தா, குற்றம் நடந்த போது தான் சிறார் என்பதால், சிறார் குற்ற சட்டப்பிரிவின் கீழ் தனது மீதான குற்றங்களை விசாரிக்க வேண்டும் எனவும், தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தான்.

குற்றவாளிகள் அனைவரும் தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தையும் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து விசாரித்து சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் அமர்வு, அனைத்து சீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்தது. சிறார் என கருதக்கோரி பவன் குப்தா தாக்கல் செய்த மனுவை பிற்பகலில் விசாரித்த உச்சநீதிமன்றம், அதையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் அனைத்து விதமான சட்ட முறையீடுகளும் முடிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நிர்பயா குற்றவாளிகளை துாக்கிலிட டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஒரே வழக்கில் தண்டிக்கப்பட்ட 4 பேரையும் வெவ்வேறு நாளில் தூக்கிலிட முடியாது என கருத்து தெரிவித்த நீதிபதிகள் மறு உத்தரவு வரும் வரை தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்குமாறும் உத்தரவிட்டனர். குற்றவாளிகளுக்கு நிறைவேற்ற இருந்த தண்டனையை 2வது முறையாக ஒத்திவைத்துள்ளது டெல்லி நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Nirpaya ,Nirbhaya , Nirpaya
× RELATED சென்னையில் நிர்பயா திட்டத்தில் 4,300 மின்கம்பங்கள் அமைக்கும் பணி தீவிரம்