×

உயிர்ப்பலி ஏற்படுவதை தடுக்க குற்றாலம் மெயினருவி தடாகத்தை மூட முயற்சி?

தென்காசி: குற்றாலத்தில் மெயினருவி தடாகத்தில் சுற்றுலா பயணிகள் தவறி விழுந்து பலியாவதை தடுக்க தடாகத்தை மூட வலியுறுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அருவிகளின் நகரமாக விளங்கும் குற்றாலத்துக்கு தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து ஆண்டுக்கு சுமார் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பழமையும், இயற்கை எழிலும் நிறைந்த பிரபல சுற்றுலாத்தலமான குற்றாலம் மெயினருவியை வாழ்வில் ஒரு முறையாவது பார்த்து, குளித்துவிட வேண்டும் என்று ஆசைப்படாதவர்கள் இருக்க முடியாது. குற்றால வனப்பகுதி வழியாக ஓடி வரும் சிற்றாறு, 288 அடி உயர மலை உச்சியிலிருந்து அருவியாக மெயினருவியில் கொட்டுகிறது. இதில் 120 அடி உயரத்தில் அருவி நீர் கொட்டும் பாறையின் நடுப்பகுதியில் பொங்குமாங்கடல் என்ற பெரிய குழி உள்ளது. உயரத்திலிருந்து ஆக்ரோஷமாக விழும் நீர் இந்த பொங்குமாங்கடல் பகுதியில் விழுந்து பரவலாகி மெயினருவியாக பாய்கிறது. இதனால்தான் இவ்வளவு உயரத்திலிருந்து விழும் தண்ணீரால் எவ்வித பாதிப்பும் இன்றி சுற்றுலா பயணிகள் குளிக்க முடிகிறது.

மெயினருவியின் முன்புறம் சுமார் 10 அடி ஆழ தடாகம் அமைந்துள்ளது. அருவி நீர் தடாகத்தில் விழுந்து ஆறாக பாய்கிறது. இந்த தண்ணீர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பாலத்தின் கீழ் பகுதியில் இருந்து பாசனத்திற்காக இரண்டு பகுதியாக பிரித்து விடப்படுகிறது. மேட்டுப்புற கால்வாயாக குற்றாலநாதர் கோயிலை சுற்றி வெளியேறும் தண்ணீர் காசிமேஜர்புரம் பாசனத்திற்கு செல்கிறது. மற்றொன்று சிற்றாற்றின் வழியாக செல்கிறது. வெள்ளப்பெருக்கு காலங்களில் அருவி நீர் நேராக தடாகத்தின் மீது கொட்டும். ஆக்ரோஷமாக பாயும் தண்ணீரின் வேகம் இந்த தடாகத்தால் மட்டுப்படுத்தப்பட்டு பெரும் சேதங்களை தவிர்க்கிறது. 1992ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் தடாகத்தின் தென்பகுதியில் இருந்த ராட்சத அளவிலான பாறைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதன் பின்பு ஏற்பட்ட சில வெள்ளப் பெருக்கு காலங்களிலும், தடாகத்தை சுற்றிலும் உள்ள தரை தளங்கள் சேதமடைந்தன.

சுமார் 40 அடி உயரத்திலிருந்து தண்ணீர் விழும் ஐந்தருவியின் முன்புறமுள்ள தடாகம் ஆழம் குறைவானது. ஐந்தருவியில் தண்ணீர் பரவலாக பிரிந்து விழுவதால் பெரு வெள்ள காலங்களில் சேதம் ஏதும் ஏற்படுவதில்லை. ஆனால் மெயினருவியில் 120 அடி உயரத்திலிருந்து தண்ணீர் பாய்வதால் அருவி நீரின் சீற்றத்தை தடாகமே தடுத்து நிறுத்துகிறது. இந்நிலையில் தடாகத்தில் அவ்வப்போது சிலர்  விழுந்து இறந்து விடுவதாக கூறி தடாகத்தை மூடுவதற்கான நடவடிக்கைகளில் காவல்துறையும், பேரூராட்சி நிர்வாகமும் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தடாகத்தை மூடினால் தண்ணீரின் ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும் என்றும், இதனால் ஒவ்வொரு ஆண்டும் வெள்ள காலங்களில் பேரூராட்சி நிர்வாகத்திற்கு பெருத்த பொருட் செலவு ஏற்படும் என்றும், தடாகத்தை மூடினால் பாசனத்திற்கு செல்லும் தண்ணீரின் அளவிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே மெயினருவி தடாகத்தை மூடும் முயற்சியை கைவிட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.
இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், செண்பகாதேவி அருவி தடாகத்தில் டைவ் அடித்து குளிக்கும்போது பாறைகளில் தலை மோதி உயிரிழப்புகள் ஏற்பட்டன. ஆரம்பத்தில் போலீசார் நிறுத்தப்பட்டு டைவ் அடிப்பது தடுக்கப்பட்டது. பின்னர் தடாகத்தில் வலை அடிக்கப்பட்டது. தொடர்ந்து செண்பகாதேவி அருவிக்கு செல்லவே தடை விதிக்கப்பட்டு விட்டது. மெயினருவியை பொருத்தவரை தடாகத்தில் யாரும் டைவ் அடித்து குளிப்பது இல்லை. குடிபோதையில் சிலர் தவறி விழுகின்றனர். வயோதிகர்கள், நோயாளிகள் குளிக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு பாதுகாப்பு வளைவின் அடிப்பகுதி வழியாக தடாகத்தில் விழுந்து விடுகின்றனர்.

2019ம் ஆண்டு மதுரையை சேர்ந்த வாலிபர் ஒருவர் மட்டுமே குடிபோதையில் தவறி விழுந்து இறந்துள்ளார். இதுபோன்ற உயிரிழப்புகளை பாதுகாப்பு வளைவின் அடிப்பகுதி, கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கம்பிகள் மூலம் உரியமுறையில் தடுப்பு அமைத்தாலே தடுத்துவிடலாம். பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பழுதடைந்த கம்பிகளை மாற்றி உரிய திட்டமிடலுடன் தடுப்பு கம்பிகளை அமைக்க வேண்டும். மாறாக தடாகத்தில் மூடும் திட்டத்தை கைவிடவேண்டும். அவ்வாறு மூடினால் அருவிப்பகுதி இயற்கை எழில் குறைந்து முழுவதும் செயற்கை தனமாக மாறிவிடும், என்றனர்.

நிபுணர்களின் கருத்து கேட்டு நடவடிக்கை
மெயினருவி தடாகத்தில் சுற்றுலா பயணிகள் தவறி விழுந்து இறப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறை சார்பில் கோரிக்கை விடுத்தோம். ஆனால் பேரூராட்சி நிர்வாகத்திடம் இருந்து இணக்கமான பதில் கிடைக்காத காரணத்தால் கைவிடப்பட்டுவிட்டது. எனினும் தடுப்பு கம்பிகளை கூடுதலாக அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறோம், என்றனர். பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், மெயினருவி தடாகத்தில் சுற்றுலா பயணிகள் தவறி விழுந்து இறப்பதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க போலீசார் கோரிக்கை விடுத்தனர். எனவே இதுகுறித்து நிபுணர்களின் கருத்துகளை கேட்டு முடிவு எடுக்கப்படும், என்றனர்.


Tags : Courtallam , To prevent biopsy Trying to shut down the Courtallam main stream?
× RELATED 8 மாதங்களுக்கு பின்னர் இன்று முதல்...