×

450 காளைகளுடன் 350 வீரர்கள் மல்லுக்கட்டினர் நாமக்கல் அலங்காநத்தத்தில் ஜல்லிக்கட்டு

சேந்தமங்கலம்: நாமக்கல் அருகே அலங்காநத்தத்தில், நேற்று ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடந்தது. இதில் 450 காளைகளும், அதை அடக்க 350 மாடுபிடி வீரர்களும் களம் கண்டனர். கலர் பிரிண்ட் எடுத்த போலி அனுமதி சீட்டுடன் காளைகளை அழைத்து வந்தவர்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், போலீசார் லேசான தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த அலங்காநத்தத்தில், நேற்று ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடந்தது. மாவட்ட எஸ்பி அருளரசு, கோட்டைகுமார், தாசில்தார் ஜானகி  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கலெக்டர் மெகராஜ்  கொடியசைத்து, போட்டியை தொடங்கி வைத்தார். முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற மாடுபிடி வீரர்கள், கலெக்டர்  தலைமையில் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.  இந்த போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை, சேலம், பெரம்பலூர், நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட 450 காளைகளும், நாமக்கல், சேலம், ஆத்தூர்,  தம்மம்பட்டி, கீரிப்பட்டி, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த  350 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

சிறப்பு பூஜைக்கு பின் தொடர்ந்து ஒவ்வொரு காளையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. தயார் நிலையில் இருந்த மாடுபிடி வீரர்கள், அவற்றை பிடிக்க முயன்றனர். ஒரு சில காளைகள் வீரர்களின் கைக்கு சிக்காமல், கண்ணிமைக்கும் நேரத்தில் துள்ளிக்குதித்து வீரர்களுக்கு போக்கு காட்டியும், வீரர்களை தூக்கி வீசியபடி பாய்ந்தும் சென்றன. ஒரு சில வீரர்கள் திமிலை பிடித்து தொங்கியபடி வட்டமடித்து பிடித்தனர். காளைகளை பிடித்த வீரர்களுக்கும், யாரிடமும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க காசு, வெள்ளி காசு, சில்வர் அண்டா, பீரோ, சைக்கிள் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக கால்நடை பராமரிப்பு துறையினர்,  ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளைகளை பரிசோதித்தனர். காவல் துறை மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில், மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே, ஜல்லிக்கட்டு மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

தடியடி: அலங்காநத்தம் ஜல்லிக்கட்டில்  மொத்தம் 450 காளைகள் பங்கேற்றன. வாடிவாசலில் இருந்து சற்று தொலைவில்,   கால்நடை பராமரிப்பு துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் முகாம் அமைத்து,  காளையின் புகைப்படம், உரிமையாளரின் ஆதார் அட்டை, அனுமதிச்சீட்டு ஆகியவற்றை  பரிசோதித்த பின்னரே, காளைகளை அனுமதித்தனர். அப்போது ஒரு சிலர் போலியாக  நுழைவுச்சீட்டை கலர் பிரிண்ட் எடுத்து வந்திருந்தனர். பலரின் முகவரி  தவறுதலாக இருந்ததால், அதிகாரிகள் அனுமதிக்க மறுத்தனர். ஆனால், இது ஒரிஜினல்  அனுமதி சீட்டு தான் எனக்கூறி, காளைகளின் உரிமையாளர்கள் அதிகாரிகளுடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் அங்கு கும்பலாக கூடியதால் பரபரப்பு  ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதிக்கு வந்த டிஎஸ்பி காந்தி தலைமையிலான  10க்கும் மேற்பட்ட போலீசார், லேசான தடியடி நடத்தி அவர்களை விரட்டி  அடித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஜல்லிக்கட்டு நடைபெற்ற  இடத்தின்  அருகே மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, காயமடைந்த வீரர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த போட்டியில் காளைகள் முட்டியதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஜல்லிக்கட்டு போட்டியினை கண்டு களிக்க  சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். இதையொட்டி, நாமக்கல் டிஎஸ்பி காந்தி தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டிருந்தனர்.


Tags : soldiers ,Namakkal , 350 soldiers wrestled with 450 bulls Jallikattu in Namakkal decoration
× RELATED தேர்தல் பணிக்கு வந்த துணை ராணுவ படையினருக்கு திருத்தணி போலீசார் விருந்து