×

லஞ்சம் கேட்ட அதிகாரியை கண்டித்து பெண் விவசாயி தர்ணா

கோவை:  கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் காய்கறி விற்பனை செய்ய வந்த பெண் விவசாயி, லஞ்சம் கேட்ட அதிகாரியை கண்டித்து சந்தைக்கு வெளியே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள மசக்கல் கிராமத்தை சேர்ந்தவர் ராணி (65). விவசாயி. இவருக்கும் இவரது கணவர் மற்றும் மாமனார் ஆகியோருக்கும் கோவை ஆர்எஸ்.புரம் உழவர் சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்ய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை அதிகாரி ஒருவர் பெண் விவசாயி ராணியிடம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு ராணி மறுத்ததால், அவரை உழவர் சந்தைக்குள் அதிகாரி அனுமதிக்கவில்லை என தெரிகிறது. இதனால், ராணி செய்வதறியாது திகைத்தார். நேற்று கோத்தகிரியிலிருந்து கொண்டு வந்த காய்கறிகளை உழவர்சந்தை வாயில் முன்பு வைத்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் ராணியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இது குறித்து ராணி கூறுகையில், “உழவர் சந்தை அதிகாரி வியாபாரிகளிடம் பணம்பெற்றுக்கொண்டு சுய உதவி குழுக்கள் என்ற பெயரில் காய்கறி கடைகளை விவசாயிகள் அல்லாதவர்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இவர் 10 நாட்களுக்கு மேலாக அலுவலகம் வரவில்லை. கடந்த 6 மாதங்களாக லஞ்சம் கேட்டு என்னிடம் தொந்தரவு செய்து வருகிறார். கலெக்டரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை” என கூறினார். விவசாயிகளுக்காக அமைக்கப்பட்ட உழவர்சந்தையில் அதிகாரி லஞ்சம் கேட்டதால் பெண் விவசாயி ஒருவர் காய்கறிகளுடன் உழவர் சந்தைக்கு வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Darna ,bribe officer ,officer , The bribe officer Darna, the female farmer who denounced
× RELATED மக்களவை தேர்தலில் வாக்களிக்க...