×

நிர்பயா கொலை குற்றவாளிகள் 4 பேரையும் தனித்தனியாக தூக்கிலிட முடியாது.. 3 பேரை நாளை தூக்கிலிடலாம் என்ற வாதத்தை நிராகரித்தது டெல்லி நீதிமன்றம்

புதுடெல்லி: நிர்பயா கொலை குற்றவாளிகள் 4 பேரையும் தனித்தனியாக தூக்கிலிட முடியாது என்று டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நிர்பயா குற்றவாளிகள் 3 பேருக்கு மட்டுமே நாளை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக திகார் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிர்பயா குற்றவாளி ஒருவரின்(வினய் ஷர்மா) கருணை மனு மட்டும் நிலுவையில் உள்ளதால் மற்ற 3 பேருக்கு மட்டும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது என்று டெல்லி நீதிமன்றத்தில் திகார் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

*நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகளான பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்‌ஷய் குமார், முகேஷ் குமார் சிங்குக்கு டெல்லி திகார் சிறையில் கடந்த 22ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற முதலில் உத்தரவிடப்பட்டது. ஆனால், இதை தடுக்கும் வகையில் குற்றவாளிகள் ஒவ்வொருவராக கருணை மனு, மறுசீராய்வு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் குமார், ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினான்.

*அதை ஜனாதிபதி நிராகரித்தார். கருணை மனு நிராகரிக்கப்பட்டு 14 நாட்களுக்கு பின்னரே தண்டனையை நிறைவேற்ற முடியும் என்பதால், குற்றவாளிகளின் தண்டனை பிப்ரவரி 1ம் தேதி காலை 6 மணிக்கு நிறைவேற்ற வேண்டும் என்று நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பித்தது. இதே போன்று, வினய் குமார் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டு, 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.

*இதைத் தொடர்ந்து, மற்ற குற்றவாளிகளில் ஒருவனான அக்ஷய் குமார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.

*இந்நிலையில், பிப்ரவரி 1ம் தேதி நிறைவேற்றப்பட உள்ள தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி நிர்பயா குற்றவாளி வினய் ஷர்மா மற்றும் அக்ஷய் தாகூர் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்  கருணை மனு மீது முடிவு தெரியாத நிலையில் மற்றவர்களுக்கு தண்டனை நிறைவேற்றக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

*இந்த மனுவின் மீதான விசாரணையில், நாளை நிறைவேற்ற இருக்கும் தூக்கு தண்டனையை நிறுத்தி வைப்பது தொடர்பான குற்றவாளிகளின் மனுவுக்கு விளக்கம் அளிக்கும்படி திகார் சிறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.

*இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நிர்பயா குற்றவாளிகள் 3 பேருக்கு மட்டுமே நாளை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக திகார் சிறை நிர்வாகம் தெரிவித்தது.

*ஆனால் நிர்பயா குற்றவாளிகள் மூவரின் தண்டனையை நிறைவேற்ற தற்போதைய நிலையில் எந்த விதியும், எந்த சட்டமும் தடையாக இல்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வாதத்தில் தெரிவித்தார்.

*இரு தரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி நீதிமன்றம், நிர்பயா கொலை குற்றவாளிகள் 4 பேரையும் தனித்தனியாக தூக்கிலிட முடியாது என்று டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 4 குற்றவாளிகளும் ஒரே வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், 4 குற்றவாளிகளையும் ஒரே நேரத்தில் தான் தூக்கிலிட முடியும் என்று கூறி, 3 பேரை நாளை தூக்கிலிடலாம் என்ற அரசு வழக்கறிஞர் வாதத்தை நிராகரித்தனர்.


Tags : murder convicts ,court ,Delhi , Nirbhaya, convicted, Vinay Sharma, hanging, Delhi court
× RELATED மதுபானக் கொள்கை விவகாரத்தில் உச்ச...