×

நாமக்கல் அலங்காநத்தத்தில் ஜல்லிக்கட்டு போலி அனுமதி சீட்டில் காளைகளை அழைத்து வந்து வாக்குவாதம் : போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்

சேந்தமங்கலம்: நாமக்கல் அருகே அலங்காநத்தத்தில், நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதற்காக கலர் ஜெராக்ஸ் எடுத்த போலி அனுமதி சீட்டுடன் காளைகளை அழைத்து வந்தவர்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், போலீசார்  தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த அலங்காநத்தத்தில், நேற்று ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடந்தது.  கலெக்டர் மெகராஜ்  கொடியசைத்து, போட்டியை தொடங்கி வைத்தார். மாவட்ட எஸ்பி அருளரசு முன்னிலை வகித்தார்.  திருச்சி, புதுக்கோட்டை, சேலம், பெரம்பலூர், நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட 450 காளைகளும், நாமக்கல், சேலம், ஆத்தூர்,  தம்மம்பட்டி, கீரிப்பட்டி, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த  350 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். காளைகளை பிடித்த வீரர்களுக்கும், யாரிடமும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க காசு, வெள்ளி காசு உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டது.

முன்னதாக வாடிவாசலில் இருந்து சற்று தொலைவில்,   கால்நடை பராமரிப்பு துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் முகாம் அமைத்து,  காளையின் புகைப்படம், உரிமையாளரின் ஆதார் அட்டை, அனுமதிச்சீட்டு ஆகியவற்றை  பரிசோதித்த பின்னரே, காளைகளை அனுமதித்தனர். அப்போது ஒரு சிலர் போலியாக  நுழைவுச்சீட்டை கலர் ெஜராக்ஸ் எடுத்து வந்திருந்தனர். பலரின் முகவரி  தவறுதலாக இருந்ததால், அதிகாரிகள் அனுமதிக்க மறுத்தனர். ஆனால், இது ஒரிஜினல்  அனுமதி சீட்டு தான் எனக்கூறி, காளைகளின் உரிமையாளர்கள் அதிகாரிகளுடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அங்கு கும்பலாக கூடியதால் பரபரப்பு  ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதிக்கு வந்த டிஎஸ்பி காந்தி தலைமையிலான  10க்கும் மேற்பட்ட போலீசார், லேசான தடியடி நடத்தி அவர்களை விரட்டி  அடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போட்டியில் காளைகள் முட்டியதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.



Tags : Namakkal ,Bullocks ,police station , Jallikattu fake ticket,Namakkal decoration
× RELATED நாமக்கலில் சிறுமிகளுக்கு பாலியல்...