×

தஞ்சை பெரிய கோயில் கோபுரத்தில் 12 அடி உயர தங்க கலசம் பிரதிஷ்டை

தஞ்சை :தஞ்சை பெரிய கோயில் பெருவுடையார் சன்னதியின் 216 அடி விமானத்தில் 12 அடி உயர தங்க முலாம் பூசப்பட்ட கலசம் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு விழா பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் பெருவுடையார் சன்னதி கருவறையில் 216 அடி உயரத்தில் உள்ள விமானத்தின் மீது இருந்த 12 அடி உயர பிரம்மாண்ட கலசத்தை புனரமைப்பு செய்வதற்காக கடந்த  5ம் தேதி கீழே இறக்கப்பட்டது. இதேபோல் பெரியநாயகி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், வாராஹி, சண்டீகேஸ்வரர் ஆகிய சன்னதிகளின் கோபுர கலசங்களும் இறக்கப்பட்டன.

இதைதொடர்ந்து மதுரையை சேர்ந்த ஸ்தபதி செல்வராஜ் தலைமையிலான குழுவினர் சுத்தம் செய்து மின்னர் பகுப்பு முறையில் வேதிபொருட்களை பயன்படுத்தி தங்க முலாம் பூசினர். இதில் 25 பணியாளர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்று காலை, 216 அடி உயர பெருவுடையார் சன்னதி விமானத்தில் கலசத்தை ஏற்றும் பணி நடந்தது. சிவச்சாரியார்கள், ஓதுவார்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ஊழியர்கள் மூலமாக கயிறு கட்டி 12 அடி உயர கலசம் ஏற்றப்பட்டு 6 மணி நேரத்திற்கு பிறகு பிரதிஷ்டை செய்யப்பட்டது.  இதேபோன்று பெரியநாயகி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், வாராஹி, சண்டீகேஸ்வரர் சன்னதிகளுக்கு கலசம் இன்று பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

தமிழில் குடமுழுக்கு கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு

தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த உத்தரவிடக்கோரி, ராமநாதபுரம், மோர்பண்ணையை சேர்ந்த வக்கீல் திருமுருகன், தஞ்சையைச் சேர்ந்த செந்தில்நாதன், கரூர் வக்கீல் தமிழ் ராஜேந்திரன், தமிழ்தேச பொதுவுடமை கட்சித்தலைவர் பெ.மணியரசன் ஆகியோர், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இதேபோல சமஸ்கிருதத்தில் நடத்த கோரியும் மனு செய்யப்பட்டது. இந்த மனுக்களை நீதிபதிகள் எம்.துரைசுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் விசாரித்தனர். தஞ்சை தேவஸ்தானம் மற்றும் அரசுத் தரப்பில், ‘‘குடமுழுக்கு விழா தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் நடக்கும். தமிழுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும்’’ என வாதிடப்பட்டது.

மனுதாரர்கள் தரப்பில், ‘‘குடமுழுக்கு விழா முழுமையாக தமிழில் இருக்க வேண்டும். யாகசாலை மட்டுமின்றி கருவறைக்குள்ளும் தமிழ் இடம் பெற வேண்டும்’’ என வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மனுக்கள் மீதான தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில், இந்த மனுக்கள் மீது நீதிபதிகள் எம்.துரைசுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கவுள்ளனர். ஐகோர்ட்டின் தீர்ப்பை ஓதுவார்கள், பக்தர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் ஆர்வமாக எதிர்பார்த்துள்ளனர்.


Tags : kalasam ,temple tower ,Tanjore. , 12 feet high ,golden kalasam ,temple tower of Tanjore
× RELATED தஞ்சை, ராமநாதபுரம் ஆகிய இரண்டு...