×

30க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்க் உரிமம் புதுப்பிக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனின் கையெழுத்தை போலியாக போட்டு மோசடி

சென்னை: சென்னையில் 30க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்க் உரிமம் புதுப்பிக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கையெழுத்தை போலியாக போட்டு மோசடியில் ஈடுபட்ட திருவொற்றியூரை சேர்ந்த தொழிலதிபர் உட்பட 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை மாநகர காவல் எல்லையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு மத்திய அரசு விதிகளின்படி ஒவ்வொரு ஆண்டும் தடையில்லா சான்று பெற வேண்டும் என்பது கட்டாயம். அதன்படி சென்னையில் போலீஸ் கமிஷனர் மற்றும் நிர்வாக பிரிவு துணை கமிஷனர் என இருவரிடம் கையெழுத்து பெறுவது முக்கியம். அந்த வகையில் மாநகர காவல் எல்லையில் ஒவ்வொரு ஆண்டும் காவல் துறையில் தடையில்லா சான்று பெறாத பெட்ரோல் நிலையங்கள் குறித்து கணக்கு எடுக்கப்பட்டது. அப்போது திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் சிவா (எ) சிவக்குமார் (50) என்பவர் நடத்தும் 16 பெட்ரோல் நிலையங்கள் உட்பட 30 பெட்ேரால் நிலையங்கள் 2020ம் ஆண்டுக்கான தடையில்லா சான்று பெறவில்லை என்று தெரியவந்தது. உடனே போலீசார் 30 பெட்ரோல் நிலைய உரிமையாளர்களுக்கும் உரிமம் புதுப்பிக்க நினைவு கடிதம் வழங்கியதாக கூறப்படுகிறது.

அப்போது சம்பந்தப்பட்ட 30 பெட்ரோல் நிலையங்கள் சார்பில் 2020ம் ஆண்டுக்கான தடையில்லா சான்று பெற்றதாக சான்றுகளை காட்டியுள்ளனர். அதை வாங்கி போலீசார் பார்த்த போது, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் நிர்வாக பிரிவு துணை கமிஷனர் ஆகியோர் கையெழுத்து போடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த ஆண்டு தடையில்லா சான்று பெற விண்ணப்பிக்காத 30 பேருக்கு எப்படி தடையில்லா சான்று பெற்றனர் என்பது குறித்து போலீஸ் கமிஷனர் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது போலீஸ் கமிஷனர் கையெழுத்தை போலியாக போட்டு உரிமத்தை புதுப்பித்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, திருவொற்றியூரை சேர்ந்த 16 பெட்ரோல் நிலையங்கள் நடத்தும் தொழிலதிபர் சிவாவை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கையெழுத்தை கணினி உதவியுடன் போலியாக போட்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதுமட்டும் அல்லாமல் தனது தொழில் நண்பர்களான முகேஷ்வரன், ஜெயபிரகாஷ், கணேஷ் பாபு, சுரேஷ் என 5 பேருக்கு சொந்தமான 14 பெட்ரோல் நிலையங்களுக்கு தடையில்லா சான்று பெற தலா ரூ.1.50 லட்சம் முதல் ₹3 லட்சம் வரை பணத்தை தொழிலதிபர் சிவா வாங்கி கொண்டு மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

பின்னர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் சிவா மற்றும் அவரது நண்பர்களான முகேஷ்வரன், ஜெயபிரகாஷ், கணேஷ்பாபு, சுரேஷ் ஆகிய 5 பேர் மீது ஐபிசி 420, 465, 466, 467, 468, 472 மற்றும் 47, 34 அக்ட் என 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக 5 பேரையும் கைது செய்தனர். பின்னர் இந்த மோசடிக்கு பயன்படுத்திய கணினி, போலி முத்திரைகள் உள்ளிட்ட பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனின் கையெழுத்தையே போலியாக போட்டு மோசடியில் ஈடுபட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : AK Viswanathan , Over 30 petrol punk ,permits fraud
× RELATED சென்னை ஐஐடி மாணவி தற்கொலை வழக்கு...