×

மறைமுக தேர்தல் வாக்குப்பதிவில் குளறுபடி : தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு

சென்னை: பல்வேறு காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்ட 335 பதவிகளுக்ககான மறைமுக தேர்தல் நேற்று நடந்தது. அதிலும் சில இடங்களில் குளறுபடி ஏற்பட்டதால், அங்கு தேர்தல் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்த மறைமுக உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு குளறுபடிகள் காரணமாக  335 பதவிகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. ஒரு மாவட்ட ஊராட்சி தலைவர், ஒரு மாவட்டஊராட்சி துணைத் தலைவர், 26 ஊராட்சி ஒன்றிய தலைவர், 41 ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர், 266 கிராம ஊராட்சித் துணைத் தலைவர் என மொத்தம் 335 பதவிகளுக்கு நேற்று மறை முக தேர்தல் நடந்தது. மாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர் கிராம ஊராட்சி தலைவர்  பதவிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 10.30மணிக்கும், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், கிராம ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பதவிகளுக்கான வாக்குப்பதிவு மாலை 3.30 மணி அளவில் நடந்தது. இவற்றில் பெரும்பாலான இடங்களில் வாக்குப்பதிவு சுமுகமாக  நடந்தது. ஒரு சில இடங்களில் குளறுபடிகள் ஏற்பட்டது.

சில இடங்களில் அதிமுக உறுப்பினர்கள் வாக்களிக்க வரவில்லை. கோயில்பட்டி ஒன்றிய தலைவர் தேர்தலில் 19 உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் திமுக சார்பில் 10 உறுப்பினர்களும், அதிமுக சார்பில் 9 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். ஆனாலும், அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி,  எம்எல்ஏ கீதாஜீவன் உள்ளிட்ட திமுகவினர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். அதே போல மேலும் சில இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கபட்டதாக தெரிகிறது. இதனால் பிரச்னை எழுந்தது. மேலும் ஒரு சில இடங்களில் போதிய உறுப்பினர்கள் வராத காரணத்தால் மறைமுக தேர்தல் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது. மறைமுக தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தொடர்பான விவரங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வது  தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில தேர்தல் ஆணையம் 27 மாவட்டங்களில், தேர்தலுக்கான  நேர்முக உதவியாளர்களுக்கு அறிவுரை வழங்கியிருந்தது. அதன்படி விரைவில் மறை தேர்தலில்  வெற்றிபெற்றவர்கள் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்றிய குழு துணை தலைவர் தேர்தலில் திமுக அதிக இடங்களை பிடித்தது

மறைமுகத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தொடர்பான விவரங்களை மாநில தேர்தல் ஆணையம்  நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது; மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி 1, மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் பதவி 1 என இரண்டு இடங்களுக்கு அறிவிக்கப்பட்டு இருந்த மறைமுகத் தேர்தலில் போதிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் வராமல் போனதால் மறைமுகத் தேர்தல் நடக்கவில்லை.
* ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்களுக்கான 26 இடங்களுக்கான தேர்தலில் நீதிமன்ற உத்தரவு காரணமாக போதிய எண்ணிக்கையில் உறுப்பினர் வாராத காரணத்தால் 9 இடங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக 2 இடங்களுக்கு தேர்தல் நடக்கவில்லை. மீதம் உள்ள 14 இடங்களுக்கு நடந்த தேர்தலில் அதிமுக 7 இடங்களிலும், திமுக 4 இடங்களிலும், பாமக 2 இடங்களிலும், சுயேச்சை வேட்பாளர் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.
* ஊராட்சி ஒன்றிய குழுத் துணைத் தலைவர்களுக்கான 41 இடங்களில் நடந்த தேர்தலில் நீதிமன்ற உத்தரவு காரணமாக 1 இடத்துக்கும், போதிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் வராத காரணத்தால் 16 இடங்களுக்கும், சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக 2 இடங்களுக்கும் மறைமுகத் தேர்தல் நடக்கவில்லை. மீதம் உள்ள 22 இடங்களுக்கு நடந்த தேர்தலில் அதிமுக 5, திமுக 10, பாமக 1, இந்திய தேசிய காங்கிரஸ்  1, மதிமுக 1, சுயேச்சை வேட்பாளர்கள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

Tags : Elections , Trouble, Indirect Election Voting, Postponement of Elections
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...