×

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் முதன்முறையாக பைனலில் சோபியா-முகுருசா மோதல்: ஆடவர் பிரிவு பைனலில் ஜோகோவிச்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் முதன் முறையாக பைனலில் சோபியா-முகுருசா நாளை மோதுகின்றனர். நம்பர்-1 வீராங்கனை ஆஷ்லே பார்டி அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். ஆடவர் இறுதி போட்டிக்கு பெடரரை வீழ்த்தி, ஜோகோவிச் தகுதி பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில், நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் நம்பர் ஒன் வீராங்கனை, 23 வயதான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி - அமெரிக்காவின் 21 வயதான சோபியா கெனின் மோதினர். ஆரம்பம் முதலே ஆஷ்லே பார்டிக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஆடிய சோபியா முதல் செட்டை 7-6 என்ற கணக்கில் வென்றார். அடுத்து நடந்த 2வது செட்டை 7-5 என்ற அடிப்படையில் சோபியா வென்று, இறுதி போட்டிக்குள் நுழைந்தார். இதன்மூலம், முதன்முறையாக கிராண்ட் சிலாம் தொடரில் இறுதிப் போட்டிக்கு சோபியா முன்னேறி உள்ளார்.

மற்றொரு அரையிறுதியில், ருமேனியாவின் சிமோனா ஹாலெப்பும், ஸ்பெயின் வீராங்கனை முகுருசாவும் மோதினர். இதில், முதல் செட்டை 8-7 என முகுருசா கைப்பற்றினார். 2வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய முகுருசா, 7-5 என கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு நுழைந்தார். இதன்மூலம் இறுதிப்போட்டியில் சோபியா-முகுருசா நாளை (1ம் தேதி) மோதுகின்றனர். ஆடவர் ஒன்றையர் பிரிவு முதல் அரையிறுதியில், நடப்பு சாம்பியனான செர்பிய வீரர் ஜோகோவிச்-சுவீஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் மோதினர். முன்னணி வீரர்களான இவர்களின் ஆட்டத்தில் அனல் பறந்தது. முதல் செட்டை கைப்பற்றுவதில் இருவரும் மாறி மாறி புள்ளிகளை குவித்தனர்.

இறுதியில் முதல் செட்டை 7(7)-6(1) என்ற கணக்கில் ஜோகோவிச் கைப்பற்றினார். அடுத்து ஆவேசமாக ஆடிய ஜோகோவிச் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் பெடரரை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார். இதன்மூலம் 8வது முறையாக நடப்பு சாம்பியன் ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபன் பைனலில் விளையாட உள்ளார். இன்று மதியம் நடக்கும் 2வது அரையிறுதியில், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ்-ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் மோதுகின்றனர். இதில் வெற்றி பெறுபவர், ஜோகோவிச்சுடன் பைனலில் மோதுவார்.

கலப்பு இரட்டையர் பிரிவில் போபன்னா ேஜாடி தோல்வி
ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, உக்ரைன் வீராங்கனை நாடியா கிச்சனோக்குடன் இணைந்து களம் இறங்கினார். சானியா மிர்சா, விலகியதால், நாடியாவுடன் அவர் ஜோடி சேர்ந்தார். அடுத்தடுத்த சுற்றுகளில் வென்று, கால் இறுதியில் நேற்றைய தினம் குரோசியாவின் மெக்டிக்-ஜெசிசியாவின் கிரிச்கோவா இணையை எதிர்த்து களம் இறங்கினார். ஆரம்பம் முதலே போபண்ணா ஜோடி சறுக்கலை சந்தித்தது. இதனால், 6-0, 6-2 என்ற செட் கணக்கில் போபண்ணா-நாடியா ஜோடி தோல்வியை தழுவியது. இந்த ஜோடியை வென்றதன் மூலம் மெக்டிக்-கிரிச்கோவா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஏற்கனவே கலப்பு இரட்டையரில் லியாண்டர் பயஸ்-ஜெலினா ஆஸ்டபென்கோ ஜோடி 2வது சுற்றுடன் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Tags : clash ,Sofia-Muguruza ,men ,Australian Open ,division final ,Djokovic , Australian Open Tennis Isobia-Muguruza, Men's Division, Djokovic
× RELATED நடப்புத் தொடரில் முதல் மோதல்: கொல்கத்தாவை சமாளிக்குமா பஞ்சாப்