×

‘மேன் வெர்சஸ் வைல்டு’ படப்பிடிப்புக்கு பந்திப்பூர் வனப் பகுதியை ரஜினி தேர்வு செய்தது ஏன்? சுவாரசிய தகவல்கள்

பெங்களூரு:  ‘மேன் வெர்சஸ் வைல்டு’ தொடரின்  படப்பிடிப்புக்காக பந்திப்பூர்  வனப்பகுதியை தனது விருப்பப்படி ரஜினியே ேதர்வு  செய்துள்ளார். நாட்டில் முதல் மற்றும் பெரிய தேசிய வன உயிரியல் பூங்கா  என்று பெருமை உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம்கார்பேட் பெற்றுள்ளது.  இதில், டிஸ்கவரி சேனல் குழுவினர் காடுகள் வளர்ப்பு, தண்ணீர் தேவை, வன  விலங்குகள் பாதுகாப்பு போன்றவை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு  ஏற்படுத்த, ‘மேன் வெர்சஸ் வைல்டு’ என்ற தொடரை வெளியிட்டு வருகின்றனர். இதில், பிரபலங்களை நடிக்க வைத்து வருகின்றனர். சமீபத்தில் இந்த நிகழ்ச்சிக்காக பிரதமர் மோடி காட்டுக்கு சென்று,  தொடரின் இயக்குனரான பியர் கிரில்சுடன் சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து, இந்த சாதனையில் பங்கேற்ற நடிகர் ரஜினி காந்த்தும் ஒப்புக் கொண்டார்.

ஆனால், ஜிம்கார்பேட்டுக்கு பதிலாக கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர்   வனப்பகுதியை ரஜினி தனது படப்பிடிப்புக்கு தேர்வு செய்தார். காரணம், இந்த வனப்பகுதியின் முழு தன்மையும் ரஜினிக்கு நன்கு  தெரியும். பந்திப்பூர் வனம் கர்நாடக மாநிலத்தில் இருந்தாலும் தமிழகம்  மற்றும் கேரள மாநிலங்களை ஒட்டியுள்ளதால், படப்பிடிப்பு நடத்த வசதியாக  இருக்கும். இதற்கு, பந்திப்பூர் புலிகள் சரணாலய இணை இயக்குனர் பாலசந்திரனும் உதவிகள் செய்ய முன்வந்தார். படப்பிடிப்பிற்காக  அடர்ந்த வன பகுதிக்குள் சென்ற ரஜினியுடன் பந்திப்பூர் வனப் பாதுகாப்பு  அதிகாரிகள், ஊழியர்கள் உடன் சென்றனர். இரவு நேரத்தில் வன விலங்குகள் எப்படி  வாழ்கிறது.

அவைகள் எழுப்பும் ஒலி, உணவு தேடி அலையும் காட்சிகளை  பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் இருந்து ரஜினி பார்த்துள்ளார்.  பகல் நேரத்தை காட்டிலும் இரவில் தான் வன விலங்குகள் சுதந்திரமாக சுற்றி  திறியும் என்பதை ரஜினியிடம் ஊழியர்கள் விளக்கினர். அப்போது ‘வன பாதுகாப்பு  பணியில் ஈடுபடும் உங்களின் கஷ்டம் என்னவென்பதை நேரில் பார்க்கும் வாய்ப்பு  பெற்றுள்ளேன். உங்கள் பணிக்கு இணையாக யாருடைய பணியையும் ஒப்பிட முடியாது,’  என்று ரஜினி பாராட்டினார்.

கல்கெரேவில் சூட்டிங்
பந்திப்பூர்  வனப்பகுதியில் உள்ள மூளஹோளே மற்றும் செம்மனஹள்ளா, ஹெப்பேஹள்ளி ஆகிய  வனப்பகுதியில் கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமை ரஜினி நடித்த காட்சிகள்  படமாக்கப்பட்டன. நேற்று வனப்பகுதியில் மத்தியில் உள்ள கல்கெரே பகுதியில்  பாலிவுட் முன்னணி நடிகர் அக்‌ஷய் குமார் நடித்த காட்சிகள் படம்  பிடிக்கப்பட்டது. இதில் நடிப்பதற்காக புதன்கிழமை மைசூரு வந்த  அக்‌ஷய் குமார், இரவு நட்சத்திர ஓட்டலில் தங்கினார். நேற்று காலை இயக்குனர்  பியர் கிரில்சுடன் வனத்திற்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

ரஜினிகாந்த் வாக்குறுதி
பந்திப்பூர் புலிகள் சரணாலய இணை இயக்குனர் பாலசந்திரன் மற்றும் வனத்துறை அதிகாரிகளும், ஊழியர்களும் ரஜினியிடம் விடுத்த வேண்டுகோளில், ‘நாட்டின்  பொருளாதார வளர்ச்சிக்கும் மானிட இனம் சுகாதாரமாக வாழவும், வனமும்  அதில் வாழும் வன விலங்குகளும் முக்கிய காரணம். வனத்ைத மக்கள் மரமாக  பார்க்கிறார்கள். அதன் அவசியம் குறித்து தெரியாமல் உள்ளனர். ‘மேன் வெர்சஸ்  வைல்டு’ தொடரில் நடிப்பதுடன் நிறுத்திக் கொள்ளாமல், வனம் மற்றும் வன  விலங்குகளின் பாதுகாப்பின் அவசியம் குறித்து நீங்கள் (ரஜினி) மக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நீங்கள் நடிக்கும் படங்களிலும் இதற்கு  முன்னுரிமை கொடுக்க வேண்டும்,’ என்று கேட்டுக் கொண்டனர். அவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வதாக  ரஜினி  உறுதியளித்தார்.

Tags : forest area ,Rajini ,shooting ,Bandipur ,Man of the Shooting for Bandipur , Of Man vs. Wilde, Bandipur Forest Area, Rajini
× RELATED மசூதி மீது அம்பு விடுவது போன்ற சைகை...