×

டெல்லி ஜமியா பல்கலையில் மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: வாலிபரை கைது செய்தனர் போலீசார்

புதுடெல்லி: டெல்லி ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில், மாணவர்களை நோக்கி நேற்று ஒரு நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் ஒருவர் காயம் அடைந்தார். துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறன்றன. டெல்லியில் பெரிய அளவில் இந்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களும் இச்சட்டத்திற்கு எதிராக போராடி வருகின்றனர். நேற்று மாணவர்கள், பல்கலைக்கழகத்தில் இருந்து ராஜ்காட் வரை பேரணியாக சென்றனர். அப்போது துப்பாக்கியுடன் அங்கு வந்த ஒரு நபர், திடீரென மாணவர்களை நோக்கி சுட்டார். இதில் சதாப் பரூக் என்ற மாணவர் படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும், அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை, போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பல்கலைக்கழக பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கருப்பு உடையுடன் வந்தான்: போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய ஆசாமி, கருப்பு உடையுடன் வந்துள்ளான். அவன், ‘யே லோ ஆசாதி’ (இதோ விடுதலையை எடுத்துக் கொள்ளுங்கள்) என்று சப்தமிட்டபடி, மாணவர்கள் மீது சுட்டுள்ளான். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடும் மாணவர்கள், ‘ஆசாதி’ (விடுதலை) என்ற வார்த்தையை அடிக்கடி முழக்கமிடுகின்றனர். அதை வைத்தே, துப்பாக்கியால் சுட்ட நபர், அந்த வார்த்தையை பயன்படுத்தியதாக தெரிகிறது.

Tags : Shooting ,Delhi Jamia ,youth Shooting ,campus ,Delhi ,Police arrest youth , Delhi, Jamia University, students, shootings, youth, arrests, police
× RELATED மசூதி மீது அம்பு விடுவது போன்ற சைகை...