×

என் மீது இரண்டு வழக்குகள் அல்ல 2,000 வழக்குகள் போட்டாலும் கவலைப்பட மாட்டேன்: தஞ்சையில் மு.க.ஸ்டாலின் பேச்சு

தஞ்சை: என் மீது இரண்டு வழக்குகள் அல்ல, 2ஆயிரம் வழக்குகள் போட்டாலும் கவலைப்பட மாட்டேன் என்று தஞ்சையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு திருச்சியில் இன்று நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் மாலை விமானத்தில் திருச்சி வந்தார். இதையடுத்து நேற்று காலை தஞ்சையில் எம்பி எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டார். திருமணத்தை நடத்தி வைத்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது: புதுக்கோட்டையில் நான் பங்கேற்ற திருமண விழாவில் பாஜவை சேர்ந்த அரசகுமார் பேசினார். அதன்பின் 4நாட்களில் அவர் திமுகவில் இணைந்தார். இங்கு சசிகலாவின் தம்பி திவாகரன் பேசி இருக்கிறார். அவர் உண்மையிலேயே தமிழகத்தின் மீதுள்ள அக்கறையில் பேசி உள்ளார்.

இதன்பிறகு அவர் என்ன செய்ய போகிறார் என்று எனக்கு தெரியாது. தமிழகத்தில் இன்று மோசமான நிலை நீடித்து வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் தடைகளை தாண்டி நீதிமன்றத்தை நாடியதன் மூலம் ஓரளவு வெற்றி பெற்றுள்ளோம். இந்தளவு நாம் விழிப்புடன் செயல்பட வில்லை என்றால் இன்னும் பல்வேறு முறைகேடு நடந்திருக்கும். உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு அக்கிரமம், அநியாயம் நடந்தது. அதையெல்லாம் மீறி வெற்றி பெற்றுள்ளோம். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 11 மாதங்களே உள்ளது. அதற்கு உள்ளாட்சி தேர்தல் அடித்தளம். 2 நாட்களுக்கு முன்பு கூட என் மீது 2 வழக்குகள் போட்டுள்ளனர். 2 வழக்குகள் அல்ல, 2 ஆயிரம் வழக்குகள் போட்டாலும் கவலைப்பட மாட்டேன். திமுக பனங்காட்டு நரி.சலசலப்புக்கு அஞ்சாது.

நீட் தேர்வு வேண்டாம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும், அதை தமிழக அரசால் தடுக்க முடியவில்லை. ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று சொன்னார்கள். அதற்கு நேர் எதிராக இப்போது நடந்து கொள்கிறார்கள். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வரக்கூடாது. டெல்டா மாவட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தான் திமுக போராட்டம் நடத்தி வருகிறது. டெல்டா மக்களுக்கும், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் திமுக என்றும் உறுதுணையாக இருக்கும். பொதுமக்களும் திமுகவின் போராட்டங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

* மு.க.ஸ்டாலின் தலைமையை நாளைய தமிழகம் ஏற்கும் சசிகலா தம்பி திவாகரன் புகழாரம்
தஞ்சையில் எம்பி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் இல்லத்திருமண விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா திராவிடர் கழக நிறுவன தலைவரான சசிகலாவின் தம்பி திவாகரன் பேசியதாவது: தமிழகத்தில் இன்று மிகவும் கேவலமான நிலை உள்ளது. தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கன்னடத்தில் இருந்து வந்த ஒருவர், பெரியாரை பற்றி கொச்சைப்படுத்தி பேசும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர் பெரியாரை பற்றி பேச துணிச்சல் வந்திருக்கிறது என்றால் திராவிட தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக மறைந்ததுதான் காரணம்.

தமிழகமும், தமிழ் மக்களும்தான் முக்கியம். அதை காக்கக்கூடியவர்களின் பின்னால் நிற்க வேண்டியது நமது கடமை. தமிழகத்தில் திராவிட பாரம்பரியத்தை காக்க வேண்டும். அதை காக்கக்கூடிய மிகப்பெரிய சக்தி மு.க.ஸ்டாலின். அவர் ஒரு ராணுவத்தை வழிநடத்தும் தளபதியைபோல் திமுகவை வழிநடத்தி வருகிறார். எனவே அவர் மிகப்பெரிய சக்தி என்பதை மறுக்க முடியாது. உள்ளாட்சி தேர்தலில் 85 சதவீத வெற்றியை திமுக பெற்றுள்ளது. பெரும்பாலான வெற்றிகள் ஆளுங்கட்சியால் தட்டி பறிக்கப்பட்டுள்ளது. திமுக இன்னும் விழிப்புடன் இருந்திருந்தால் இன்னும் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்க முடியும். தேர்தலில் 500, 1000 ரூபாய்க்கு யாரும் விலைபோய் விட வேண்டாம். நாளைய தமிழகம் மு.க.ஸ்டாலின் தலைமையை ஏற்கும். இவ்வாறு திவாகரன் பேசினார்.

Tags : speech ,MK Stalin , Two cases, 2,000 cases, will not worry, asylum, MK Stalin, speech
× RELATED ராஜஸ்தான் பிரசாரத்தில் வெறுப்பு...