×

விஸ்வரூபம் எடுக்கும் குரூப் 2 தேர்வு முறைகேடு ஜெயகுமாருக்கு லுக்அவுட் நோட்டீஸ்: சிபிசிஐடி அதிரடி

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட ஜெயகுமாருக்கு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளனர்.டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மோசடி குறித்து சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இதையடுத்து பள்ளிக்கல்வி துறை உதவியாளர் முதல் தேர்வு எழுதிய நபர்கள் என 14 பேர் கைதாகினர். மேலும் சிபிசிஐடி விசாரணையில், டிஎன்பிஎஸ்சி விடைத்தாள் ஓடும் வாகனத்தில் வைத்து திருத்தப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது. இதில் சிக்கிய குற்றவாளிகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் கைது செய்யும் நடவடிக்கையின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.

குரூப் 4 தேர்வு முறைகேடுபோல, மெகா முறைகேடு குரூப் 2விலும் நடந்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது. குறிப்பாக ராமநாதபுரம் தேர்வு மையம் கடந்த 2017ம் ஆண்டு முதல் டிஎன்பிஎஸ்சி நடத்திய அனைத்து தேர்வுகளிலும் தமிழகத்தில் முதல் 100 இடங்களில் பிடித்து சாதனை படித்துள்ளது. இதுதான் இந்த மோசடி வெளிவர முக்கிய காரணமாக அமைந்தது. இந்த மோசடிக்கு மூளையாக சென்னை ஆயுதப்படையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் சித்தாண்டி செயல்பட்டுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு நடந்த குரூப் 2 தேர்வில் அவரது மனைவி, தம்பிகள் மற்றும் தம்பி மனைவி என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தமிழகத்தில் முதல் 10 இடங்களை பிடித்தனர். அதோடு இல்லாமல் மாவட்ட வாரியாக இடைத்தரகர்களை நியமித்து ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை பணத்தை வாங்கி கொண்டு 200க்கும் மேற்பட்டோரை தேர்ச்சி பெற வைத்துள்ளார்.

இதையடுத்து உதவி ஆய்வாளர் சித்தாண்டி சகோதரர் வேல்முருகனை நேற்று முன்தினம் சிபிசிஐடி போலீசார் காரைக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பணியில் இருந்த போது அதிரடியாக கைது செய்தனர். பின்னர் வேல்முருகனிடம் நடத்திய அதிரடி விசாரணையில் தான் உதவி ஆய்வாளர் சித்தாண்டியின் மோசடி குறித்து பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியது. கடந்த 2008ம் ஆண்டு ஆயுதப்படை காவலராக சித்தாண்டி காவல் துறையில் பணியில் சேர்ந்து தற்போது ஆயுதப்படையில் ஆர்.எஸ்.ஐ.யாக பணியாற்றி வருகிறார். அப்போது, ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு நம்பிக்கைக்குரிய நபராக இருந்தார். இதனால் அந்த அதிகாரி அவரது கார் ஓட்டுநராக பணியில் வைத்து கொண்டார்.

அந்த ஐபிஎஸ் அதிகாரி டிஜிபியாக ஓய்வு பெற்ற பிறகு டிஎன்பிஎஸ்சியின் தலைவராக பதவி வகித்தார். அப்போது தான் சித்தாண்டி அந்த அதிகாரிக்கு தெரியாமல், அவரது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் உதவியுடன் மோசடியில் ஈடுபட தொடங்கியுள்ளார். பின்னர் கடந்த 2017ம் ஆண்டு நடந்த குரூப் 2 தேர்வில் தன் மனைவி, தம்பிகள்  உட்பட 4 பேரை ராமநாதபுரம் மையத்தை தேர்வு செய்து முதல் 10 இடங்களில் தனது குடும்பத்தை சேர்ந்த நபர்கள் உட்பட 200 பேருக்கு டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் துணையுடன் தேர்வில் வெற்றி பெற வைத்துள்ளார். இதன் பின் குரூப் 4 தேர்வில் சித்தாண்டி தனக்கு நம்பிக்கைக்குரிய இடைத்தரகர்களாக ஜெயகுமார் மற்றும் டிஎன்பிஎஸ்சி ரெக்கார்ட் கிளார்க் ஓம் காந்தன் உள்ளிட்டோருடன் இணைந்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

குரூப் 4 தேர்வின் முடிவு வெளியான போது சித்தாண்டி சொந்த ஊரை சேர்ந்த மாடு மேய்த்து வந்த திருவராசு என்பவரை தேர்வு எழுத வைத்து மாநிலத்தில் முதல் இடத்தில் தேர்ச்சி பெற வைத்துள்ளார். இது தான் மோசடி கும்பல் சிக்கியது மற்றும் அவர்களின் மோசடிகள் அம்பலமானது என்று அவரது தம்பி வேல்முருகனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக சிபிசிஐடி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான சித்தாண்டியை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அவரது சகோதரர் வேல்முருகனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சித்தாண்டி சென்னையில் ரகசிய இடம் ஒன்றில் பதுங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. இதற்கிடையே குரூப் 4 தேர்வு முறைகேட்டில் தொடர்புடையதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் உட்பட 3 பேரை சிபிசிஐடி போலீசார் எழும்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையில் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ஒரே குடும்பத்தை சேர்ந்த பலர் சந்தேகத்திற்கு இடமான வகையில் குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. அந்த பட்டியலின்படி விரைவில் குரூப் 4 தேர்வில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களை அழைத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. சன்மானம்: குரூப் 4 முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியான சென்னை முகப்பேர் கவிமணி சாலையில் உள்ள ஜெயகுமாரின் வீட்டில் சிபிசிஐடி போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தனர்.

ஜெயகுமார் வீட்டில் 6 மணி நேரத்திற்கு மேல் நடந்த சோதனையில் வழக்கிற்கான முக்கிய ஆவணங்கள் மற்றும் விரைவில் மை அழிய கூடிய பேனாக்கள் மற்றும் வங்கி கணக்குகள் போலி அரசு முத்திரைகள் ஓஎம்ஆர் ஷீட் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளுக்கு நேரடி தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஜெயகுமார் தொடர்ந்து தலை மறைவாக இருப்பதால் அவருக்கு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். அதில் தலைமறைவாக இருக்கும் ஜெயகுமாரை கண்டு பிடித்து தரு பவர்களுக்கு தக்க சன் மானம் வழங்கப்படும் என்று நோட்டீசில் குறிப் பிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பல இடங்களில் இந்த நோட்டீஸ் ஓட்டப்பட்டுள்ளது.

Tags : Group ,Jayakumar ,CBCID ,Group 2 , Viswaroopam, Group 2 Examination, Abuse, Jayakumar, Lookout, Notices, CBCID
× RELATED திருத்தப்பட்ட ஆண்டு திட்ட அட்டவணையை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.