×

அசாமில் 1,615 தீவிரவாதிகள் சரண்: 4,800 ஆயுதங்கள் ஒப்படைப்பு

கவுகாத்தி: அசாமில் முதல்வர் சர்பானந்த சோனோவால் முன்னிலையில் 1,615 தீவிரவாதிகள், துப்பாக்கி உள்ளிட்ட 4,800க்கும் மேற்பட்ட ஆயுதங்களுடன் நேற்று சரணடைந்தனர். அசாம் மாநிலத்தில் போடோலாந்து தனி மாநிலம் கோரி, போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி (என்டிஎப்பி), அனைத்து போடோ மாணவர்கள் கூட்டமைப்பு (ஏபிஎஸ்யூ) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. இதற்கிடையே, கடந்த 23ம் தேதி, எட்டு பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 644 தீவிரவாதிகள், முதல்வர் சர்பானந்தா சோனேவால் முன்னிலையில் நடந்த விழாவில் சரணடைந்தனர். இதையடுத்து, கடந்த 28ம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில், போடோலாந்து முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில், கவுகாத்தியில் முதல்வர் சர்பானந்த சோனோவால் தலைமையில் நேற்று நடந்த விழாவில் 1,615 தீவிரவாதிகள் சரணடைந்தனர். இவர்களில் 836 பேர் என்டிஎப்பி முன்னணியையும், 579 பேர் என்டிஎப்பி ரன்ஜன் டெய்மரி பிரிவையும், 200 பேர் சராய்க்வரா தலைமையிலான என்டிஎப்பி(எஸ்) பிரிவையும் சேர்ந்தவர்களாவர். இவர்கள் தங்களிடம் இருந்த ஏகே ரக துப்பாக்கிகள், இலகு ரக மெஷின் கன், ஸ்டன் கன் துப்பாக்கிகள் உள்ளிட்ட 4,800க்கும் மேற்பட்ட ஆயுதங்களையும் ஒப்படைத்தனர்.

இந்த விழாவில் பேசிய முதல்வர் சோனோவால், ``அசாமை தென் கிழக்கு ஆசியா, இந்தியாவின் முன்னிலை மாநிலமாக மாற்ற, நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். வன்முறையை விட்டு ஒதுங்கியதன் மூலம் முன்னேற்ற பாதையை நோக்கி நீங்கள் அடி எடுத்து வைத்துள்ளீர்கள். மாநில அரசு, அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடியும் உங்களுடன் இணைந்து போடோ பகுதியின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம். தியாகிகள் தினத்தில் தீவிரவாதிகள் சரண் அடைந்திருப்பது, அவர்கள் அசாமில் அமைதியை விரும்புவதையே காட்டுகிறது. போடோ சமூகத்தின் வளர்ச்சி, அசாமின் வளர்ச்சியாகும்’’ என்று தெரிவித்தார்.

Tags : militants ,Assam , Assam, 1,615 militants, Saran, 4,800 weapons, surrender
× RELATED அசாமில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இந்திய தலைவன் கைது: கூட்டாளியும் சிக்கினான்