×

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், பாஜ எம்.பி. வர்மா பிரசாரம் செய்ய தடை: தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை

புதுடெல்லி: டெல்லி தேர்தல் பிரசாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் பாஜ எம்.பி. பர்வேஷ் வர்மா ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட தடைவிதித்து தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் 8ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இத்தேர்தலையொட்டி பல்வேறு கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தொடர்ந்து பாஜ தலைவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த வகையில், சமீபத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜ வேட்பாளர் கபில் மிஸ்ராவுக்கு தேர்தல் ஆணையம் 48 மணிநேரம் தடை விதித்தது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள், மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் பாஜ எம்பி பர்வேஷ் வர்மா ஆகியோர் சர்ச்சைக்குரிய வகையில் பேசினர்.

இதனால் இவர்களிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும், அவர்களை நட்சத்திர பிரசாரகர்கள் பட்டியலில் இருந்து நீக்க பாஜ தலைமைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில், அனுராக் தாக்கூர் மற்றும் பர்வேஷ் வர்மாவின் விளக்கத்தை ஆராய்ந்த தேர்தல் ஆணையம், அதில் திருப்தி இல்லாததால் அவர்கள் பிரசாரம் செய்ய தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதன்படி, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு மூன்று நாட்களும், பர்வேஷ் வர்மாவுக்கு நான்கு நாட்களும் பிரசாரம் செய்ய தடை விதித்து நேற்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

* ஷாகீன்பாக்கில் போலீசார் ஆய்வு
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு(சிஏஏ) எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 15ம் தேதி முதல் டெல்லி ஷாகீன்பாக் பகுதியில் ஒரு பிரிவினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்கள் அந்த இடத்தை விட்டு நகராமல் போராட்டத்தை தொடர்ந்து வருவதன் காரணமாக அந்த சாலையை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஷாகீன்பாக்கில் தேர்தலை சுமூகமாக நடத்துவது குறித்து டெல்லி போலீசார் நேற்று ஆய்வுகளை மேற்கொண்டனர்.

* விளம்பரத்திலும் சர்ச்சை
தேர்தல் பிரசாரத்திற்காக பாஜ சார்பில் அச்சு ஊடகங்களில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த விளம்பரத்தில், “15 சால் காங்கிரஸ் கீ கொள்ளை” (காங்கிரஸின் 15 ஆண்டு கொள்ளை) என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, டெல்லியில் ஷீலா தீட்சித் தலைமையில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 15 ஆண்டுகள் ஆட்சியிலிருந்ததை சுட்டிக்காட்டி இவ்வாறு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் பாஜ மீது காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. இந்த புகாரை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், காங்கிரசின் புகார் தொடர்பாக, பாஜ தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங்குக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Tags : Anurag Thakur ,BJP ,Prohibition , Speaking, Union Minister of State for Labor, Anurag Thakur and BJP MP Verma, Promotion, Prohibition, Election Commission
× RELATED இந்திய விமான படையின் முன்னாள் தலைமை...