×

ஐடி மாப்பிள்ளை, வெளிநாட்டு மாப்பிள்ளை வேண்டாம்: விவசாயியை கரம் பிடித்த இன்ஜினியரிங் பட்டதாரி பெண்... கண்ணமங்கலம் அருகே நெகிழ்ச்சி

கண்ணமங்கலம்: திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த முனியந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன், விவசாயி. இவரது மனைவி பேபி. இவர்களது மகள் அரசம்மாள்(25), மகன் சக்திவேல்(21). அரசம்மாள் இன்ஜினியரிங் பட்டதாரி. அவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். இதையறிந்து பல்வேறு இடங்களிலிருந்து பெண் கேட்டு வந்தனர். ஆனால் அரசம்மாள், விவசாயியைத்தான் திருமணம் செய்வேன் என்று பிடிவாதமாக இருந்தார். இதையறிந்த அதே பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு வரை படித்து விவசாயம் செய்யும் சிவகுமார் என்பவர்,  தயக்கத்துடன் அரசம்மாளை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். அரசம்மாள் இதை ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து இரு வீட்டார் சம்மதத்துடன் அதே ஊரில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் செய்து வைத்தனர்.

இதுகுறித்து அரசம்மாள் கூறுகையில், ‘என் குடும்பம் விவசாய குடும்பம். அப்பா விவசாயி. அவரது உழைப்பில்தான் நாங்கள் படித்தோம். இன்று விவசாயத்தை ஏதோ செய்யக் கூடாத தொழிலாக கருதி பெரும்பாலானவர்கள் ஒதுக்குகிறார்கள். விவசாயிக்கு பெண் தரவும் மறுக்கிறார்கள். இது எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. விவசாயம் காப்போம் என வாட்ஸ் அப்பில் பகிர்வதை விட, விவசாயத்தின் அருமையை உலகுக்கு உணர்த்த விரும்பி அதற்கு நானே முதல் அடியை எடுத்து வைக்க முடிவு செய்தேன். இதை நான் பாராட்டுக்காக செய்யவில்லை. ஐடி கம்பெனி அல்லது வெளிநாட்டு மாப்பிள்ளைக்கோ அடுத்த நாள் வேலை உத்தரவாதமில்லை. அடுத்தவருக்கு அடிமையாய் இருந்து வேலை நிமித்தமாக பிரிந்து வாழ்வதை விட, சொந்த மண்ணில் வியர்வை சிந்தி உழைத்து எஜமானாய் தலைநிமிர்ந்து வாழலாம் என்பது என் பணிவான கருத்து.

என் விருப்பத்தை புரிந்து கொண்ட என் தந்தை எனக்கு முழு ஆதரவு அளித்ததோடு மட்டுமல்லாமல், இதுவரை யாருமே செய்யாத வகையில் தாய் வீட்டு சீதனமாக ₹10 லட்சம் மதிப்பில் டிராக்டர், கலப்பை உள்ளிட்ட விவசாய உபகரணங்களை வழங்கினார். என் படிப்பறிவு, என் கணவரின் உழைப்பு இரண்டையும் சேர்த்து நவீன விவசாயத்தில் சாதனை படைத்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாய் இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

பாக்ஸ்...
வாழ்வாதாரத்துக்கு உத்தரவாதம்
மணமகள் தந்தை லட்சுமணன் கூறுகையில், ‘அரசு வேலையில் உள்ளவருக்குத்தான் பெண் கொடுப்பேன் என சொன்னால் 80 சதவீதம் பேருக்கு திருமணமே நடக்காது. அதே நேரம் வேலையில் இருப்பவர்கள் பலர் வரதட்சணை கொடுமை செய்கின்றனர். இவற்றை எல்லாம் ஒரே நாளில் மாற்றி விட முடியாது. என்றாலும், அதற்கான முதல் அடியை எடுத்து வைத்து நாம் ஒரு முன்னுதாரணமாய் இருப்போம் என்பதற்கான சிறு முயற்சிதான் இந்த திருமணம். தங்க நகைகள், பைக், கார் போன்ற பொருட்களை கொடுப்பதை விட, அவர்கள் தினசரி வாழ்க்கையில் பயன்படும் வகையில் விவசாய உபகரணங்களை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உத்தரவாதம் அளிப்பதோடு, உழைப்பால் உயருங்கள் என்பதற்கான மறைமுக ஆசிர்வாதம் தான் இது’ என்றார்.

Tags : ID groom ,groom ,kannamangalam , Farmer, Engineering Graduate Woman, Kannamangalam
× RELATED செய்யாறு அருகே இன்று நடக்கும் திருமண...