×

சோழவந்தான் அருகே கருப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கு... ஆனா இல்லை: அதிகாரிகள் கடிதத்தால் மக்கள் குழப்பம்

சோழவந்தான்: சோழவந்தான் அருகே கருப்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இதுவரை துவக்கப்படவில்லை. ஆனால் அப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் இருப்பதாக அரசு அதிகாரியிடம் இருந்து வந்துள்ள கடிதத்தால் கிராமமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சுற்றிலும் கணேசபுரம், அம்மச்சியாபுரம், பொம்மன்பட்டி, மேலநாச்சிகுளம், கரட்டுப்பட்டி, நாச்சிகுளம், நரிமேடு, சாலாட்சிபுரம், பாலகிருஷ்ணாபுரம், இரும்பாடி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இவ்வூர் மக்கள் சிகிச்சை பெறுவதற்கு சோழவந்தான் அல்லது வாடிப்பட்டிக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால் இப்பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இப்பகுதிமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில் கருப்பட்டியை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் சுந்தர் என்பவர், கருப்பட்டி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரி கடந்த நவ.14ல் முதல்வரின் தனி பிரிவுக்கு கோரிக்கை மனு அனுப்பினார். இதற்கு பதிலளித்து  மதுரை சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில், “கருப்பட்டி கிராமத்தில் ஏற்கனவே அரசு கட்டிடத்தில் துணை சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. எனவே புதிய சுகாதார நிலையம் அமைக்க வழி வகையில்லை” என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதிமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தும் ஆரம்ப சுகாதார நிலையம் அமையாத நிலையில், கருப்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளதாக கூறி அதிகாரிகள் தரப்பில் இருந்து வந்த கடிதத்தை பார்த்து சிரிப்பதா, அழுவதா என்று தெரியாமல் கிராமமக்கள் தவிக்கின்றனர்.

இது குறித்து முதல்வரின் தனிப் பிரிவிற்கு கடிதம் எழுதிய சுந்தர் கூறுகையில், “சுகாதார நிலையம் திறக்க கோரிக்கை வைத்தால், எங்கள் ஊரில் ஏற்கனவே இருப்பதாக அதிகாரிகள் தவறான தகவலை தந்துள்ளனர். எங்களது கிராமத்தில் துணை சுகாதார நிலையம் இருப்பதாக கூறியுள்ளது வேடிக்கையாக உள்ளது. இது குறித்து கலெக்டர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொய்யான தகவல் கொடுத்த அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.


Tags : health center ,Karuppady ,Cholavandan ,Early Health Center , Early health center, Karuppady, Cholavandan ,People ,letter
× RELATED சிங்கத்தாகுறிச்சி சுகாதார...