×

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்தக்கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு

மதுரை: தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்தக்கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. குடமுழுக்கை தமிழில் நடத்த உத்தரவிடக்கோரி பெ.மணியரசன், வழக்கறிஞர் திருமுருகன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். மிகவும் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு விழா வருகின்ற பிப்ரவரி 5ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நடைபெறக்கூடிய குடமுழுக்கு விழா தமிழில் தான் நடத்தப்பட வேண்டும். சமஸ்கிருத மொழியில் நடத்தப்பட கூடாது என்று உயர்நீதிமன்ற கிளையில் வழக்கறிஞர் திருமுருகன் உட்பட பலர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை தொடர்ந்து 2 நாட்களாக நீதிபதிகள் துரைசாமி அமர்வு விசாரணை நடத்தி வருகின்றது. இன்று சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. இதனை தொடர்ந்து, தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழி ஆகிய இரண்டு மொழிகளிலுமே குடமுழுக்கு விழா நடைபெறும். எக்காரணத்தை கொண்டும் தமிழ் மொழி புறக்கணிக்கப்படாது என்று நேற்று தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த அறிக்கையை நீதிபதிகள் ஒரு பிரமாண பத்திரமாக இன்று தாக்கல் செய்யுங்கள், வழக்கு விசாரணை இன்று எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் தஞ்சை பெரிய கோவில் தமிழ் சார்ந்த கோவிலாகும். இது தமிழ் மன்னனால், தமிழ் சிற்பிகளை கொண்டு தமிழ் ஆகம விதிகளுக்கு உட்பட்டு கட்டப்பட்டதாகும். இக்கோவிலில் ராஜராஜ சோழன் காலத்தில் இருந்து தமிழ் மொழியில் தான் குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்று வருகின்றன.

எனவே தொடர்ந்து தமிழில் மட்டுமே நடத்த வேண்டும் என்று முத்த வழக்கறிஞர் ஆஜராகி தனது வாதத்தை முன்வைத்தார். அதேபோல் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் கருவறை உள்ளிட்ட 5 இடங்களில் தமிழில் மந்திரம் ஓதப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தமிழில் மந்திரங்கள் ஓதுவதற்காக ஓதுவார்களை நியமித்து உள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு தரப்பு வாதங்களையும் விரிவாக கேட்டு கொண்ட நீதிபதிகள் வழக்கினை நேற்று ஒத்திவைத்தனர்.

Tags : Supreme Court ,temple ,Tanjay ,Kutumbukkam , high Court, decide, tomorrow,investigation
× RELATED நீட் வினாத்தாள் கசிவு: தேர்வை மீண்டும் நடத்தக்கோரி மனு