×

டெல்லியில் சர்ச்சை பேச்சு: அனுராக் தாக்கூர் 3 நாளும்,பர்வேஷ் வர்மா 4 நாளும் பிரச்சாரம் செய்ய தடை...தேர்தல் ஆணையம் நடவடிக்கை

புதுடெல்லி: 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டமன்றத்திற்கு வரும் பிப்ரவரி 8-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவுகள் வருகிற பிப்ரவரி 11-ம் தேதி வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம்   அறிவித்துள்ளது. இந்நிலையில், டெல்லி தேர்தல் பிரசாரத்தில் சர்ச்சை ஒன்றையே தங்களது இலக்காக கொண்டு செயல்படுவதுபோல் பாஜ தலைவர்கள் தலைவர்கள் களம் இறங்கி உள்ளனர். கடந்த சில முன் பா.ஜ.க.வின் நட்சத்திர   பேச்சாளரான மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், டெல்லியில் ரித்தாலா தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளர் மணீஷ் சவுத்ரிக்கு ஆதரவாக பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, துரோகிகளை சுட்டு தள்ளுங்கள் என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். தேர்தல் நேரத்தில் இதுபோன்று மக்களை தூண்ட கூடிய வகையில் அனுராக் பேசியது பற்றி தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்கள்   அஜய் மேக்கன் மற்றும் சுபாஷ் சோப்ரா ஆகியோர் புகார் அளித்தனர். ஏற்கனவே, கபில்மிஸ்ரா, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் இதுபோன்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாஜ எம்.பி. ஒருவர்  சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.  

தேர்தல் பிரசாரத்தில் பேசிய பாஜ எம்.பி., பர்வேஷ் வர்மா, “காஷ்மீரில், அங்குள்ள காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு என்ன நடந்ததோ, அது டெல்லியிலும் நடக்கும். ஷாகீன்பாக்கில் லட்சக்கணக்கானோர் கூடியுள்ளனர். அவர்கள் உங்கள் வீடுகளுக்குள்   புகுந்து உங்களது மகள்களையும், சகோதரிகளையும் பலாத்காரம் செய்து கொலையும் செய்துவிடுவார்கள். எனவே, டெல்லி மக்கள் முடிவெடுக்க வேண்டிய நேரம் இது. வரும் தேர்தலில் பாஜ வெற்றி பெற்றால், 11ம் தேதி இரவே ஷாகீன் பாக்   இடம் காலி செய்யப்படும். அங்குள்ளவர்கள் அப்புறப்படுத்தப்படுவார்கள்’’ என்று கூறினார். ஷாகீன்பாக் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பிட்ட மதப்பிரிவினர். அவர்களுக்கு எதிராக பாஜ தலைவர்கள் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில்   பேசி வருகின்றனர். மக்களிடையே பீதியை கிளப்பும் அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, சர்ச்சை கூறிய வகையில் பேசியதாக மத்திய இணையமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் பாஜக எம்.பி பர்வேஷ் வர்மா ஆகியோரின் பெயர்களை நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய பாஜகவுக்கு இந்திய   தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தேர்தல் மாதிரி நடத்தை விதிகளை (எம்.சி.சி) மீறியதற்காக பாஜக எம்.பி. பர்வேஷ் சிங் வர்மாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இன்று ஜனவரி 30-ம் தேதி நண்பகல் 12   மணி வரை விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் அவருக்கு கால அவகாசம் அளித்திருந்தது.

இந்நிலையில், டெல்லி சட்டமன்ற தேர்தலில் மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் 3 நாட்களும், பாஜக எம்.பி பர்வேஷ் வர்மா 4 நாட்களும் பிரச்சாரம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. சர்ச்சை கூறிய வகையில்  பேசியதாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.


Tags : Parvesh Verma ,Anurag Thakur ,campaigning ,Election Commission , Anurag Thakur banned from campaigning for 3 days, Parvesh Verma for 4 days ...
× RELATED இந்திய விமான படையின் முன்னாள் தலைமை...