×

வேதாரண்யத்தில் பனியால் முல்லைப்பூ சாகுபடி பாதிப்பு: நிவாரணம் வழங்க கோரிக்கை

வேதாரண்யம்: வேதாரண்யம் தாலுகா பகுதிகளில் புகையிலை சாகுபடிக்கு மாற்றாக சுமார் 80 ஆண்டுகளாக நடைபெற்று வரும் முல்லை பூ சாகுபடி இந்த ஆண்டு கடும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சாகுபடியை நம்பியுள்ள பாதிக்கப்பட்டுள்ள சுமார் பத்தாயிரம் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் கருப்பம்புலம், ஆயக்காரன்புலம், மருதூர் உள்ளிட்ட 20 கிராமங்களில் சுமார் ஆறாயிரம் ஏக்கரில் முல்லை பூ சாகுபடி நடைபெறுகிறது.

ஆண்டுதோறும் மார்ச் மாதம் துவங்கி அக்டோபர் வரை முல்லை பூ சீசன் காலமாகும். இந்த சீசன் காலத்தில் நாள் ஒன்றுக்கு 15 முதல் 20 டன் முல்லைப்பூ பட்டுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது கடும் பனிப்பொழிவால் பூ உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு 2 டன் பூ மட்டுமே வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
சீசன் காலத்தில் கிலோ ரூபாய் 50க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. சீசன் இல்லாத நவம்பர் முதல் பிப்ரவரி வரை கிலோ 200 முதல் 1000 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. பல மாதங்கள் குறைந்த விலைக்கு விற்பனையாகும் இந்த முல்லைப் ரூ.1000த்திற்கு விலை போகிறது.

தற்போது கிலோ ரூ.700 முதல் 1000 வரை விற்பனையாகிறது. புகையிலை சாகுபடிக்கு மாற்றாக சுமார் 80 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த முல்லை பூ சாகுபடி இந்த ஆண்டு கடும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சாகுபடியை நம்பியுள்ள சுமார் பத்தாயிரம் குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பூ அதிகம் விளையாததால் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் முல்லைப்பூ விவசாயம் செய்யும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விளைச்சல் அதிகமான காலங்களில் பூ எடுக்கும் கூலி கூட விலையில்லாததால் விவசாயிகள் பல நாட்கள் பூவை எடுக்காமலே விட்டு விடுகின்றனர். இதனால் அவர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. பனிக்காலங்களில் பூ விளையாததால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இந்த தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர்.

எனவே அரசு நெல், கரும்பு மஞ்சளுக்கு அறிவித்தது போல முல்லை பூ சாகுபடியால் பாதிக்கும் காலங்களில் பல்வேறு சாகுபடிகளுக்கு நிவாரணம் வழங்குவது போல் ஏக்கரும் 50 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும். மேலும் ஏக்கருக்கு ரூ.1 லட்சம் கூட்டுறவு வங்கி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் நீண்டகால கடனாக வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் முல்லைப்பூவிற்கு நிரந்தர விலை கிடைக்க வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு விவசாயிகளின் குழுக்களை ஏற்படுத்தி அந்த குழுவிற்கு குளிரூட்டப்பட்ட வாகனத்தை அரசு வழங்க வேண்டும். இந்த பனிகாலத்தில் பூ உற்பத்தி பாதிக்கப்படுவதையும், அதை தடுப்பதற்கு உண்டான வழியையும் வேளாண்மைத்துறையினர் விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் என முல்லைப்பூ உற்பத்தியாளரும், வேதாரண்யம் வணிகர் சங்க தலைவருமான திருமலை செந்தில் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Relief Vedaranyam ,Vedaranyam , Cultivation, dew, mulberry flower, cultivation, relief
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்