×

விலை வீழ்ச்சியால் நிலக்கோட்டையில் குப்பையில் மலைபோல் குவிந்த பூக்கள்

வத்தலக்குண்டு:நிலக்கோட்டையில் விலை வீழ்ச்சியால் குப்பையில் மலைபோல் பூக்கள் குவிந்தது. அதை கண்டு துப்புரவு தொழிலாளர்கள்  மலைத்து போய் நின்றார்கள். நிலக்கோட்டை பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் மல்லிகை, ரோஜா, கனகாம்பரம், செவ்வந்தி போன்ற பல்வேறு பூ விவசாயம் நடந்து  வருகிறது. இங்கு உற்பத்தியாகும் பூக்கள் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் அங்கிருந்து விற்பனையாகி சிங்கப்பூர்,  மலேசியா, கனடா போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. மேலும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கும் தஞ்சாவூர்,  சென்னை, கோவை தர்மபுரி போன்ற பெருநகரங்களுக்கும் அனுப்பப்படுகிறது. ஏற்றுமதியாகும் செவ்வந்தி பூக்களின் அளவு குறைந்ததாலும்,  செவ்வந்தி பூக்களின் வரத்து அதிகரித்ததாலும் கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.200க்கு விற்பனை ஆகிய செவ்வந்திபூ நேற்று ஒரு கிலோ ரூ.5க்கு  விற்பனையானது.

இதனால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த விவசாயிகள் கொண்டு வந்த பூக்களை மொத்த கடையில் கொடுத்து அவர்கள் விற்கும் வரை  காத்திருந்து விற்பதில் மொத்தக்கடைக்காரர் கமிஷன் எடுத்துக் கொண்டு மேலும் வெகுநேரம் காக்க வைத்து குறைந்த அளவு பணம் பெறுவதற்கு  பதிலாக பூக்களை குப்பையில் கொட்டி விடுவதே மேல் என்று கருதி கோபத்தில் கொண்ட வந்த பூக்களை குப்பைகளில் கொட்டி சென்றனர்.  இதனால் பூக்கள் சிறு மலைபோல் குவிந்து காணப்பட்டது.தினசரி அப்பகுதியில் குப்பைகளை அள்ள வரும் துப்புரவு பணியாளர்கள் மலைபோல் குவிந்துள்ள பூக்களை பார்த்து மலைத்து நின்றனர். பிறகு  பேரூராட்சி அலுவலகத்திற்கு தகவல் கொடுத்து அங்கிருந்து குப்பை வாகனத்தை அழைத்து பூக்களை அள்ளிச்சென்றனர். இதுகுறஇத்து பூ விவசாயி  காட்டுராஜா கூறுகையில், ‘பூப்பறிக்க ஆள் கிடைக்காமல் அதிக சம்பளம் கொடுத்து ஆள் வைத்து வண்டி வாடகை கொடுத்து பூவை கொண்டு  வருகிறோம். அதற்கு சரியான விலை கிடைப்பதில்லை. இதுபோன்ற நேரங்களில் பூக்களை வைத்து விற்க அரசு குளிர்சாதன கிட்டங்கி இருந்தால் வசதியாக இருக்கும். எனவே அரசு நிலக்கோட்டையில்  குளிர்சாதன கிட்டங்கியும், அரசு வாசனை திரவிய தொழிற்சாலையும் கொண்டு வரவேண்டும்’ என்றார்.

Tags : landfill , Flowers piled,garbage, landfill , prices fall
× RELATED அரசு மருத்துவமனையில் இருந்து...