×

பேராவூரணி பகுதியில் தொடர் மழை; பொங்கல் மண்பானை தயாரிப்பு பணி பாதிப்பு: தொழிலாளர்கள் கவலை

பேராவூரணி: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் தொடர்மழை காரணமாக பொங்கல் மண்பானை தயாரிப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளதால் மண்பாண்ட தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தஞ்சை மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி நீலகண்டபுரம் பகுதியில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக பரம்பரை பரம்பரையாக மண்பாண்டம் தயாரித்து விற்பனை செய்யும் சுமார் 75 குடும்பத்தினர் உள்ளனர். வாழ்வாதாரத்திற்காக பல்வேறு சிரமங்களுக்கு இடையில் பரம்பரை தொழிலை விடாமல் செய்து வருகின்றனர். சாதாரண நாட்களில் மண்பாண்டங்கள் அதிக அளவில் விற்பனையாகாவிட்டாலும் பொங்கல் பண்டிகைக்கு புதுப்பானையில் பொங்கல் வைப்பதற்காக விவசாய குடும்பத்தினர் அனைவரும் மண்பானை வாங்குவது வழக்கம். இங்கு தயாரிக்கப்படும் மண்பானைகளை பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, ஆம்பலாபட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச்சென்று விற்பனை செய்வது வழக்கம். பொங்கல் பானைகளை தயாரிப்பதற்கு 30 ரூபாய் வரை அடக்கவிலை ஆகும் நிலையில் 40 ரூபாயிலிருந்து 50 ரூபாய்க்குதான் குறைந்த லாபத்தில் விற்பனை செய்கின்றனர். இந்தாண்டு கொரோனா பாதிப்பால் தொழில்செய்ய முடியாமல் முடங்கிக்கிடந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு பானை செய்து விற்பனை செய்யலாம் என நினைத்திருந்த நிலையில் தொடர்மழையால் ஆறு, குளங்களில் மண் அள்ளிவர முடியாமலும், அள்ளிவந்த மண்ணைக்கொண்டு செய்த பானைகளை சூளையில் வைத்து சுடவைக்க முடியாமலும் சிரமத்தில் உள்ளனர். இதகுறித்து தஞ்சை மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க தலைவர் பழனிவேல் சங்கரன் கூறியது: பரம்பரை தொழிலை விடக்கூடாது என்ற எண்ணத்தில் மண்பாண்டத் தொழிலை செய்து வருகிறோம். ஆறு, குளங்களில் மண் அள்ள பொதுப்பணித்துறை அனுமதி பெறவேண்டும். அனுமதி கிடைத்தாலும் மழைக்காலங்களில் சிரமப்பட்டுத்தான் மண் அள்ளிவரவேண்டும். பேராவூரணி அருகே உள்ள ஆதனூர், துறையூர், நாடங்காடு உள்ளிட்ட பகுதிகளில் தொழில் செய்வதற்காக இரவு நேரங்களில் திருடர்களைப்போல் சென்று மண்அள்ளிவர வேண்டியுள்ளது. தற்போது பருவம் தப்பி தொடர் மழை பெய்து வருவதால் மண்பானைகளை தயாரிக்கவும் முடியவில்லை. தயாரித்த பானைகளை சூளையில் வைத்து சுடவைக்க விறகுகள், தென்னை மட்டைகள் நனைந்து கிடப்பதால் சுடவைக்க முடியவில்லை. மண்பாண்ட தொழிலாளர்களை அரசு கண்டுகொள்வதில்லை. நலவாரியத்திலிருந்து மழைக்கால நிவாரணம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படுவது குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வந்து நிறையப்பேருக்கு வரவில்லை. பானை தயாரிக்க அரசு வழங்கும் இலவச மின்சுற்றி முழுமையாக வழங்கப்படவில்லை. கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வராத நிலையில் எங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்….

The post பேராவூரணி பகுதியில் தொடர் மழை; பொங்கல் மண்பானை தயாரிப்பு பணி பாதிப்பு: தொழிலாளர்கள் கவலை appeared first on Dinakaran.

Tags : Paraoorani ,Pongal ,Peraoorani ,Thanjavur district ,Pongal Manipan ,Bhiraoorani ,Dinakaran ,
× RELATED வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை...