×

சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பிப்ரவரி 1ம் தேதி முதல் வீடு தேடி வரும் பென்சன்: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் அதிரடி திட்டம்

ஹைதராபாத்: ஆந்திராவில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வருகின்ற 1ம் தேதி முதல் வீடு தேடி நிதியுதவி வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைக்க உள்ளார். ஆந்திராவின் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்ற பின்பு பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு அரசு வேலை. வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள் திட்டம். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்  தாய்மார்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் தாய்மாடி திட்டங்களை கொண்டு வந்தார். மேலும், பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு 21 நாட்களில் தூக்கு தண்டனையை நிறைவேற்றும் திஷா சட்டம் என பல அதிரடி திட்டங்களை அவர் அறிவித்தார். அந்த வகையில் தற்போது சமூக பாதுகாப்பு திட்டங்களில் பென்சன் பெறுபவர்களுக்கு வருகின்ற பிப்ரவரி 1ம் தேதி முதல் வீடு தேடி பென்சன் வழங்கும் திட்டத்தை தொடங்கவுள்ளார்.

இதன் மூலம் மொத்தம் 54 லட்சத்து 64 ஆயிரம் பயனாளிகள் பயன்பெற உள்ளனர். இத்திட்டம் தொடர்பாக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முதன்மை செயலாளர் நீலம் சஷ்னி, டி.ஜி.பி. கவுதம் சவால் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 6 மாதங்களுக்கு முன்பு வரை 39 லட்சம் பேருக்கு பென்சன் வழங்கப்பட்டு வந்துள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றதும் தகுதியான மேலும் பலரை பென்சன் திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பேரில் பென்சன் பயனாளிகளின் எண்ணிக்கை 54 லட்சமாக உயர்ந்துள்ளது. இவர்களுக்கு புதிய பென்சன் கார்டுகள் மற்றும் அரிசி அட்டைகளை வழங்கவும் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து, வருகின்ற 15ம் தேதியில் இருந்து 21ம் தேதிக்குள் புதிய கார்டுகளை வினியோகிக்கவும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். இதே போல ஏழைகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தையும் வருகிற பிப்ரவரி 1ம் தேதி முதல் தொடங்க உள்ளார்.

Tags : Benson to Get Home ,home ,AP ,CM , Social Security Program, Feb. 1, House, Benson, AP CM Jagan Mohan, Plan
× RELATED தாகம் தீர்க்கும் பானங்கள் தரமானதா?