×

குடியுரிமை திருத்த சட்டம் எதிரொலி...சென்னையில் பிறப்பு சான்றிதழ் பெற இஸ்லாமியர்கள் அதிகளவில் விண்ணப்பம்: மாநகராட்சி தகவல்

சென்னை: குடியுரிமை திருத்த சட்டம் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் நிலையில் சென்னையில் பிறப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. குடியுரிமை திருத்த சட்டம் அமலான நிலையில், சிறுபான்மையினர் பாதிக்கப்படுவர் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதே நேரத்தில் இச்சட்டம் இந்தியர்களை பாதிக்காது என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் பிறப்பு சான்றிதழ் கோரி மனு அளிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சான்றிதழ்களை விண்ணப்பித்து வருவதாக இஸ்லாமியர்கள் கூறுகின்றனர்.

இதனை தொடர்ந்து, பிறப்பு சான்றிதழ் வேண்டி மனு அளித்தவர்களில் 80 சதவீதத்தினர் இஸ்லாமியர்கள் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 1991ம் ஆண்டுக்கு முன்பு பிறந்தவர்கள், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பிறப்பு சான்றிதழை பெற வேண்டும் எனவும் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இதனிடையே அனைத்து ஆவணங்கள் சமர்ப்பித்தும் அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனர். ஆதலால் பிறப்பு சான்றிதழ் வழங்கும் முறையை எளிதாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக மாநில அரசு எந்த முடிவும் எடுக்காத நிலையில், பிறப்பு சான்றிதழ் பெறுவதில் ஏராளமானோர் ஆர்வர் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Islamists ,Chennai , Citizenship, Law, Madras, Birth Certificate, Islam, Application
× RELATED உலகம் முழுவதும் ரமலான் நோன்பு தொடக்கம்